விதவை பெண் பலாத்கார குற்றச்சாட்டில் இருந்து பாஜ எம்எல்ஏ திரிபாதி உள்பட 6 பேர் விடுவிப்பு: மருமகன் மட்டும் பலிகடா

படோஹி: உத்தர பிரதேசத்தில் விதவைப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்ட பாஜ எம்எல்ஏ மற்றும் 5 பேர் விடுவிக்கப்பட்டனர். உத்தரபிரதேச மாநிலத்தின் படோஹி தொகுதி பாஜ எம்எல்ஏ,வாக இருப்பவர் ரவீந்திரநாத் திரிபாதி. இவரும், இவருடைய மருமகன் சந்தீப் திவாரி உள்பட 7 பேர் மீது கடந்த புதன்கிழமை, காவல் நிலையத்தில் 40 வயது விதவைப்பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகார் அளித்தார். அதில் அவர், ‘கடந்த 2016ம் ஆண்டு எம்எல்ஏ திரிபாதியின் மருமகன் சந்தீப் திவாரி என்னை முதலில் பலாத்காரம் செய்தார். பின்னர், கடந்த 2017ம் ஆண்டு என்னை ஒரு மாதமாக ஓட்டல் அறையில் அடைத்து திரிபாதி உட்பட 7 பேர் பலாத்காரம் செய்தனர்,’ என்று குற்றம்சாட்டினார்.

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். அப்போது, பாலியல் புகார் தொடர்பான ஆதாரங்களை அப்பெண்ணால் அளிக்க முடியவில்லை. மேலும், மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளவும் மறுத்து விட்டார். இதையடுத்து, எம்எல்ஏ திரிபாதி மற்றும் 5 பேர் மீதான குற்றசாட்டை நிரூபிக்க முடியாததால், அவர்கள் மீதான புகாரை போலீசார் கைவிட்டனர். அவர்களை வழக்கில் இருந்து விடுவித்தனர். சந்தீப் திவாரி மீதான குற்றச்சாட்டு உறுதியானதால் அவரை கைது செய்தனர். இது குறித்து எம்எல்ஏ திரிபாதி கூறுகையில், ‘`எதிர்க்கட்சியினர் மீது மணல் கடத்தல் புகார் கூறியதால் என் மீது பாலியல் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளனர். தற்போது, அந்த குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளேன். நியாயம் வென்றுள்ளது,’’ என்றார்.

Related Stories: