நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் அரசு அதிகாரிகளுக்கும் தொடர்பு?... சிபிசிஐடி விசாரணையில் இடைத்தரகர் ‘பகீர்’ தகவல்

தேனி:  நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் இடைத்தரகர் வேதாச்சலத்திடம் சிபிசிஐடி போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தினர்.   அப்போது இவ்வழக்கில் சில அரசு அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக இடைத்தரகர் தெரிவித்ததாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேனி அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் உதித்சூர்யா நீட்தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த வழக்கு தேனி  சிபிசிஐடி போலீசாரால் விசாரிக்கப்பட்டு வருகிறது. இவ்வழக்கில் கைதான மாணவர்கள் மற்றும் பெற்றோர் ஜாமீனில் விடுதலையாகி உள்ளனர். இடைத்தரகர் மனோகரன், மாணவர் பவித்ரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.  கடந்த 14ம் தேதி கிருஷ்ணகிரி அருகே செல்லம்பட்டியை சேர்ந்த இடைத்தரகர் வேதாச்சலம், இவ்வழக்கு சம்பந்தமாக சேலம் கோர்ட்டில் சரணடைந்தார்.

இவரை தேனி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்திய சிபிசிஐடி போலீசார், அவரிடம் காவலில் விசாரிக்க அனுமதி கோரி மனு செய்தனர். அதை ஏற்ற கோர்ட், வேதாச்சலத்தை 4 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தது.

இதனையடுத்து நேற்று முன்தினம்  தேனி நகர் சமதர்மபுரத்தில் உள்ள சிபிசிஐடி போலீஸ் அலுவலகத்தில் சிபிசிஐடி எஸ்பி விஜயகுமார் தலைமையிலான போலீசார், இடைத்தரகர் வேதாச்சலத்திடம் விசாரணை நடத்தினர். இதில், நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் நடந்தது எப்படி? மாணவர்களின் போட்டோக்களை கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் உதவியுடன் போட்டோஷாப் மூலம் மாற்றியது எப்படி என்பது போன்ற கேள்விகளுக்கு இடைத்தரகர் வேதாச்சலம் பதிலளித்ததாக கூறப்படுகிறது. மேலும் இதில் அரசு அதிகாரிகள் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என கூறியதாகவும் தெரியவருகிறது. இன்றும் விசாரணை நடக்க உள்ளது.

Related Stories: