திருச்செந்தூரில் முதல்வர் எடப்பாடி பேச்சு: தமிழகத்தை முன்னோடி மாநிலமாக்க தொடர்ந்து செயலாற்றி வருகிறோம்

நெல்லை: தமிழகத்தை முன்னோடி மாநிலமாக்க தொடர்ந்து செயலாற்றி வருகிறோம் என திருச்செந்தூரில் நடந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். திருச்செந்தூர் அருகே வீரபாண்டியன்பட்டினத்தில் ரூ1.34 கோடியில் அமைக்கப்பட்ட பா.சிவந்தி ஆதித்தன் மணிமண்டபத்தை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் முன்னிலை வகித்தார். பாலசுப்பிரமணிய ஆதித்தன், சிவந்திஆதித்தன், ஆதவன் ஆதித்தன் வரவேற்றனர். நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், அரசியல் கட்சியினர் பங்கேற்றனர். தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அங்கு அமைக்கப்பட்டிருந்த நூலகத்தை திறந்து வைத்து பார்வையிட்டார்.  பின்னர் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடந்த அரசு விழாவில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

அனைத்து துறைகளிலும் தமிழகம் வளர்ச்சி பெற்று வருகிறது. நாட்டிலேயே சிறந்த ஆளுமை மிக்க மாநிலமாக தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டுள்ளது. சாத்தியமான திட்டங்களை மட்டுமே அறிவித்து நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். அனைத்து மக்களுக்கும் எண்ணற்ற திட்டங்களை வழங்கி, தமிழகத்தை ஒரு முன்னோடி மாநிலமாக்க தொடர்ந்து செயலாற்றி வருகிறோம். திருச்செந்தூர் அருகே ஆலந்தலையில் ரூ52 கோடியே 46 லட்சம் மதிப்பீட்டில் கடல் அரிப்பு தடுப்பு சுவர் கட்டும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். தாமிரபரணி ஆற்றின் வெள்ளநீரை வறட்சி பகுதிகளுக்கு கொண்டு செல்லும் தாமிரபரணி- கருமேனியாறு- நம்பியாறு இணைப்பு திட்டத்தின் பகுதி 4க்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. வெள்ளநீர் கால்வாய் திட்ட பணிகளை இவ்வாண்டுக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன்மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் 18 கிராமங்களுக்கான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

திருச்செந்தூர் அருகே அமராபுரம் கிராமத்தில் கருமேனியாற்றின் குறுக்கே ரூ3 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டப்படும். தூத்துக்குடி மாவட்டத்தில் தலா ரூ3 கோடியே 30 லட்சம் செலவில், திருச்செந்தூர் மற்றும் சாத்தான்குளத்தில் புதிய தாலுகா அலுவலகங்கள் கட்டப்படும். கடம்பூர், விளாத்திக்குளம், புதூர் ஆகிய பேரூராட்சிகள் மற்றும் 180 கிராமங்களுக்கு கூட்டுக்குடிநீர் திட்ட அபிவிருத்தி பணிகள் ரூ10 கோடியே 85 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக விழாவில் பல்வேறு அரசு திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். 6 ஆயிரத்து 944 பயனாளிகளுக்கு நலத்திட்டங்களையும் வழங்கினார். ஆய்வகம் திறப்பு: தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறுநீரகம் செயலிழந்த நோயாளிகளுக்கு ரத்தம் சுத்திகரிப்பதற்காக ரூ50 லட்சத்தில் 7 ரத்த சுத்திகரிப்பு கருவிகள் புதிதாக அமைக்கப்பட்டு உள்ளன.

மேலும், ரூ4.13 கோடியில் இதய நோயாளிகளின் சிகிச்சைக்காக கேத்லேப்  அமைக்கப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வகத்தை திறந்து வைத்து கருவிகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், கலெக்டர் சந்தீப்நந்தூரி, எஸ்.பி.சண்முகநாதன் எம்எல்ஏ மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட அதிமுக சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் மாலை 4.30 மணியளவில் தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார்.

Related Stories: