போலி ஆவணம் தயாரித்து நிலம் விற்ற தகராறு தொழிலதிபரை கடத்தி சரமாரி தாக்குதல்: 7 பேர் கைது கார் பறிமுதல்

அண்ணாநகர்: அம்பத்தூரை சேர்ந்தவர் சுடலைமுத்து (44), தொழிலதிபர். இவர், கடந்த 2017ம் ஆண்டு, அஞ்சட்டி கிராமத்தில் உள்ள 1.75 ஏக்கர் நிலத்தை, செங்குன்றத்தை சேர்ந்த தாமோதரன் என்பவருக்கு ரூ.2.75 கோடிக்கு விற்பனை செய்துள்ளார். இதனிடையே, 2019ம் ஆண்டு தாமோதரன் இறந்து விட்டதால், அவரது மகன் முத்துக்குமார், தந்தை வாங்கிய மேற்கண்ட நிலத்தின் ஆவணங்களை ஆய்வு செய்தார். அப்போது, தொழிலதிபர் சுடலைமுத்து அரசு புறம்போக்கு நிலத்தை போலி ஆவணம் தயாரித்து தனது தந்தைக்கு விற்றது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த முத்துக்குமார், இதுபற்றி சுடலைமுத்துவிடம் கேட்டு தகராறு செய்துள்ளார்.

அதற்கு சுடலைமுத்து, பணத்தை திருப்பி கொடுத்து விடுவதாக உறுதியளித்துள்ளார். ஆனால், நீண்ட நாட்களாகியும் அந்த பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக  கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த முத்துக்குமார், நேற்று முன்தினம் சுடலைமுத்துக்கு போன் செய்து, ‘‘உங்களிடம் பேச வேண்டும், அண்ணாநகர் பகுதிக்கு வாருங்கள்’’ என்று அழைத்துள்ளார். அதன்படி சுடலைமுத்து அங்கு சென்றபோது, அடியாட்களுடன் காத்திருந்த முத்துக்குமார், சுடலைமுத்துவை திடீரென காரில் கடத்தி, அண்ணாநகரில் ஒரு அறையில் அடைத்து வைத்து, பணத்தை கேட்டு சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதற்கிடையில், சுடலைமுத்து வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி ேராஜா, திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரணையில் சுடலைமுத்துவை முத்துக்குமார் கடத்தியது தெரியவந்தது. செல்போன் சிக்னலை வைத்து, சம்பவ இடத்துக்கு சென்ற ேபாலீசார், சுடலைமுத்துவை மீட்டனர். அவரை கடத்திய 7 பேரை சுற்றி வளைத்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் இருந்து கார் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: