×

‘விவாத் சே விஸ்வாஸ்’ திட்டத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு வரி பிரச்னைக்கு தீர்வு காணலாம்: புதிய வாய்ப்பு தருகிறது வருமான வரித்துறை

புதுடெல்லி: ‘விவாத் சே விஸ்வாஸ்’ திட்டத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வரி வழக்கு பிரச்னைகளை தீர்த்துக் கொள்ளலாம்,’ என வருமான வரித்துறை அறிவித்துள்ளது. வரி வழக்குகளை சமூகமாக தீர்த்துக் கொள்ள ‘விவாத் சே விஸ்வாஸ்’ என்ற திட்டம் கொண்டு வரப்படும் என பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இத்திட்டம் தொடர்பான விளம்பரத்தை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது. இதில், ‘உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வருமான வரி வழக்கு பிரச்னைகளை தீர்த்துக் கொள்ள பொன்னான வாய்ப்பு,’ என கூறப்பட்டுள்ளது.

* இத்திட்டத்தின் கீழ் கடந்த ஜனவரி 31ம் தேதிக்கு முன்பு வரை நிலுவையில் உள்ள வருமான வரித்துறை தொடர்பான வழக்குகள், மேல்முறையீட்டு பிரச்னைகளை தீர்த்துக் கொள்ளலாம்.
* மேல்முறையீடு செய்ய கடந்த ஜனவரி 31ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ள வரி வழக்கு பிரச்னைகளையும் தீர்த்துக் கொள்ளலாம்.
* வருமான வரி, அபராதம், வட்டி, வரி பிடித்தம் தொடர்பான அனைத்து பிரச்னைகளையும் இத்திட்டத்தில் தீர்த்துக் கொள்ள முடியும்.

* இத்திட்டத்தின் கீழ் மார்ச் 31ம் தேதிக்குள் வரி செலுத்தினால், பிரச்னை தீர்ப்பு வரியை 100 சதவீதம் செலுத்த வேண்டும். வருமான வரி சோதனை  வழக்குகளில் 125 சதவீத வரி செலுத்த வேண்டும்.
* பிரச்னை தீர்ப்பு அபராதம், வட்டி அல்லது கட்டணம் தொடர்பான மேல்முறையீடுகளுக்கு மார்ச் 31ம் தேதிக்குள் 25 சதவீதம் வரி செலுத்த வேண்டும். ஜூன் 30ம் தேதிக்கு பின் செலுத்தினால் 30 சதவீதம் செலுத்த வேண்டும்.
* மார்ச் 31ம் தேதிக்கு பின்போ அல்லது இத்திட்டம் முடிவடையும் ஜூன் 30ம் தேதிக்கு பின்போ வரி செலுத்தினால், 110 சதவீத பிரச்னை தீர்ப்பு வரி செலுத்த வேண்டும். சோதனை வழக்குகளில் 135 சதவீதம் செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Income Tax Department ,Vivad Se Vishwas Scheme , Vivad Se Vishwas Scheme, New Opportunity, Income Tax Department
× RELATED சென்னையில் வருமான வரித்துறை சோதனை:...