பணிபுரியும் இடத்தில் பாலியல் கொடுமை தடுப்பு சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்த கூடாது: சென்னை உயர் நீதிமன்றம் அறிவுரை

சென்னை: பணிபுரியும் இடத்தில் பாலியல் வன்கொடுமை தடுப்பு மற்றும் பாதுகாப்பு  சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்தக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மத்திய அரசின் வணிகம் மற்றும் தொழில் துறையின் கீழ் செயல்படும் டிரேட் மார்க் துறையின் சென்னை அலுவலகத்தில் துணை பதிவாளராக பணியாற்றி வருபவர் நடராஜன். இவர் மீது அதே அலுவலகத்தில் உதவி பதிவாளராக பணியாற்றி வரும் பெண் அதிகாரி கடந்த 2013 டிசம்பரில் டிரேட் மார்க் பதிவாளரிடம் புகார் கொடுத்தார். புகாரில் நடராஜன் தன்னை இழிவாக நடத்துவதாகவும், ஒருசார்பு நிலை எடுப்பதாகவும் கூறியிருந்தார். பதிவாளர் அந்த புகாரை துறை ரீதியாக விசாரணை நடத்தும் குழுவுக்கு அனுப்பினார்.

துறைரீதியான குழு விசாரணையில் தனக்கு நியாயம் கிடைக்காது என்று நினைத்த பெண் அதிகாரி, கடந்த 2016 ஜூன் 30ம் தேதி தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்திடம் புகார் கொடுத்தார். அதில், தன்னை நடராஜன் பாலியல் ரீதியான தொந்தரவுகளுக்கு உள்ளாக்கினார் என்று பலமுறை தெரிவித்துள்ளார். இதையடுத்து, அந்த புகார் சமூக நலத்துறையின் கீழ் செயல்படும் கமிட்டிக்கு அனுப்பப்பட்டது. அந்த புகாரை விசாரித்த கமிட்டி, புகாரில் முகாந்திரம் உள்ளதாக தெரிவித்தது. அதே நேரத்தில் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரியும் புகார் மீது தனியாக விசாரணை நடத்தினார். ஒரே நேரத்தில் 2 விசாரணை நடத்துவது விதிகளுக்கு முரணானது என்று அறிவிக்க கோரி நடராஜன் மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து நடராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அளித்த உத்தரவு வருமாறு: புகார்தாரர் கொடுத்த முதல் புகார் பொதுவான குற்றச்சாட்டுகளுடன் தரப்பட்டது. ஆனால், அவர் கொடுத்த 2வது புகாரில் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் என்ற குற்றச்சாட்டுகள் அதிகம் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதிலிருந்து புகார் கொடுத்தவர் தனது தனிப்பட்ட பிரச்னையை தீர்க்க முழு அளவில் முயன்றுள்ளது தெரிகிறது. அவரது புகாரை விசாரித்த கமிட்டி குற்றம்சாட்டப்பட்டவருக்கு வாய்ப்பு தராமல் தனது முடிவை ஒருதலைப்பட்சமாக அறிவித்துள்ளது. ஒவ்வொரு அலுவலகத்திலும் சில கட்டுப்பாடுகளை வைத்திருப்பார்கள். அதில் பெண் ஊழியர்களுக்கு ஒதுக்கப்படும் பணியை முடிக்காமல் அவர்கள் வெளியே செல்லக்கூடாது என்பதும் ஒன்றாகும். பணிபுரியும் இடத்தில் நிர்வாக அதிகாரி, ஊழியர்களுக்கு பணி வழங்குவதற்கு முழு அதிகாரம் உள்ளது.

இதை தங்களுக்கு எதிரானது என்று புகார் கொடுக்க முடியாது. தங்களது திறமையின்மையை மறைக்க இதுபோன்ற புகார்களை கொடுக்க கூடாது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உரிய வாய்ப்புகள் தரப்பட வேண்டும். பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு சட்டத்தை பெண்கள் தங்களின் சுயமரியாதையை பாதுகாப்பதற்காக பயன்படுத்த வேண்டும். அந்த சட்டத்தை மற்றவர்களை துன்புறுத்தும் வகையில் தவறாக பயன்படுத்தக்கூடாது. மனுதாரர் நடராஜன் புகார் கொடுத்தவரின் மேல் அதிகாரிதானே தவிர முதலாளி இல்லை. இதை நிர்வாக தீர்ப்பாயம் கருத்தில் கொள்ளவில்லை. எனவே, மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர் மீதான புகாரை விசாரித்த கமிட்டியின் (லோக்கல் கமிட்டி) உத்தரவும் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: