விரைவில் கோடைகாலம் தமிழகத்தில் மின்தேவை அதிகரிக்க வாய்ப்பு: முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமா அரசு?

சென்னை: விரைவில் கோடைகாலம் துவங்க உள்ளதால் மின்தேவை உயர்வதற்கான வாய்ப்புள்ளது. எனவே அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் மின்தேவையின் அளவு ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த 2018ம் ஆண்டில் உச்சபட்ச மின்தேவையின் அளவு 15,440 மெகாவாட் அளவிற்கு இருந்தது. இது 2019ம் ஆண்டில் கோடைகாலம் துவங்குவதற்கு முன்னதாகவே உயர்ந்தது. அப்போது  16,000 மெகாவாட் என்ற அளவை தொட்டது. பிறகு 3.4.2019ம் ஆண்டு 16,151 மெகாவாட் என்ற உச்சபட்ச மின்தேவை ஏற்பட்டது. இதனால் கடந்த ஆண்டில் பலஇடங்களில் மின்தடை ேபான்ற பிரச்னை ஏற்பட்டது.

குறிப்பாக கிராமப் பகுதிகளில் குறைவான அழுத்த மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் டிவி, குளிர்சாதனபெட்டி உள்ளிட்ட பல்வேறு வீட்டு உபயோக சாதனங்கள் பழுதடைந்தன. இதை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவையில் தினமும் 6 மணி நேரம் தொழிற்சாலைகளை ஜெனரேட்டர்  மூலம் இயக்குமாறு மின்வாரியம் அறிவுறுத்தியதாக தகவல் வௌியானது. இதுபோன்ற பிரச்னைகளால் பல்வேறு தரப்பினரும் கடும் பாதிப்பை சந்தித்தனர். இந்நிலையில் நடப்பாண்டிற்கான கோடைகாலம் விரைவில் துவங்கவுள்ளது. மார்ச் மாதத்திலிருந்து மின்சாதனங்களான ஏசி, குளிர்சாதனப்பெட்டி போன்றவற்றின் பயன்பாடு அதிகரிக்கும்.

அப்போது மின்தேவையும் அதிகரிக்கும். கடந்த ஆண்டைவிட, நடப்பாண்டில் மின்தேவை உயர்வதற்கான வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. எனவே வரவுள்ள கோடைகாலத்தை கருத்தில்கொண்டு, அதை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மின்வாரியம் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: