சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் குறித்து பொய் பிரசாரத்தை கண்டித்து கலெக்டர் அலுவலகம் நோக்கி வரும் 28ம் தேதி பேரணி: தமிழக பாஜ அறிவிப்பு

சென்னை: தமிழக பாஜ பொது செயலாளர் கே.எஸ்.நரேந்திரன் வெளியிட்ட அறிக்கை: இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதா (சிஏஏ), தேசிய மக்கள் குடியுரிமை பதிவேடு (என்ஆர்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) என்ற மூன்று திட்டங்களை பற்றியும் பொய்யான செய்திகளை பரப்புவதோடு, சிறுபான்மை மக்களிடம் பீதியை உருவாக்கி அவர்களை கொண்டு சட்டவிரோத போராட்டங்களையும் நடத்தி வருகிறார்கள். சிறுபான்மை மக்களிடமும், இளைஞர்களிடமும், மாணவர்களிடமும், குழந்தைகளிடமும் நஞ்சை விதைக்கிறார்கள். இதைக் கண்டு தமிழக மக்கள் வேதனைக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகிறார்கள். பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்களும் இந்திய குடியுரிமை சட்டத்தால் இந்தியாவை சேர்ந்த ஒரு இஸ்லாமியருக்கு கூட எந்தவித பாதிப்பும் இல்லை என்று மீண்டும், மீண்டும் தெரிவித்தும், திட்டமிட்டே இஸ்லாமிய மக்களை குழப்புகிறார்கள்.

எனவே, பொய்யான தகவல்களை பரப்பி, போலியான போராட்டங்களை உருவாக்கி, தமிழகத்தின் அமைதிக்கு ஊறு விளைவிக்கும் போராட்டங்களை தடை செய்ய வேண்டும். இந்து மதத்தை அவமதிக்கும் செயல்பாடுகளை கண்டித்தும், சட்டத்தை மீறுவோர் மீது சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி மாபெரும் பேரணி நடைபெறும். வருகிற 28ம் தேதி (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பாஜக சார்பில் நடைபெறும் இந்த பேரணியில் பல லட்சம் பேர் கலந்து கொள்ள இருக்கிறார்கள். அனைத்து மக்களும், இளைஞர்களும் திரளாக வந்து இந்த பேரணியில் பங்கேற்று தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டிட குரல் கொடுக்க வேண்டும்.

Related Stories: