அதிமுகவில் உட்கட்சி மோதலை சரிகட்ட தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய முதல்வர் எடப்பாடி திட்டம்

சென்னை: அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதலை சரிசெய்ய தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மாவட்ட நிர்வாகிகளுடன் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் நேரடியாக ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

அதிமுக வளர்ச்சி பணி மற்றும் தேர்தல் பணிகள் குறித்து அதிமுகவில் மொத்தமுள்ள 56  மாவட்ட நிர்வாகிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கடந்த 10, 11 மற்றும் 16, 17 ஆகிய தேதிகளில் ஆலோசனை நடத்தினர். ஒவ்வொரு நாளும் 14 மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடந்தது. அப்போது மாவட்ட செயலாளர்கள், பகுதி செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மட்டுமே அழைக்கப்பட்டு இருந்தனர்.

மேலும், கட்சியில் கலந்து கொள்பவர்கள் ஒருவர் மீது ஒருவர் தங்களது குற்றச்சாட்டுகளை நேரடியாக தெரிவிக்க கூடாது என்றும் எழுத்துப்பூர்வமாக மட்டுமே அளிக்க வேண்டும் என்றும் மேலிடம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், அதையும் மீறி சில நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டுகளை அளித்தனர். வேலூர் மாவட்ட நிர்வாகிகளை கண்டித்து, முதல்வர் எடப்பாடி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் காரை வழிமறித்து புகார் மனுவும் அளித்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள் கூட்டத்துக்கு அழைக்காமல் தளவாய்சுந்தரம் புறக்கணித்து விட்டார்.

அந்த மாவட்ட நிர்வாகிகளை கட்சி தலைமையிடம் நெருங்கவிடாமல் தடுத்து வருகிறார் என்றும் குற்றம்சாட்டி கட்சி அலுவலகம் முன் திடீர் போராட்டமும் நடத்தினர்.அதேபோன்று, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட சில மாவட்ட நிர்வாகிகள் தங்கள் மாவட்ட கட்சி நிர்வாகிகள் பகிரங்கமாக புகார் தெரிவித்தனர். இவர்களின் முக்கிய குற்றச்சாட்டாக, அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் 2ம் மற்றும் 3ம் கட்ட அதிமுக நிர்வாகிகளை மதிப்பதே இல்லை. எந்த பணியானாலும் பணம் வாங்கிக் கொண்டுதான் செய்கிறார்கள். அப்படியென்றால், உண்மையான கட்சி விசுவாசிகளுக்கு என்ன மரியாதை என்றே புகார் அளித்தனர்.

அதனால், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்து, அதிமுக கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகளையும் அழைத்து பேசி கட்சி வளர்ச்சி பணிக்கான ஆக்கப்பூர்வ பணிகளை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.இந்த கோரிக்கையை முதல்வர் எடப்பாடியும் ஏற்றுக் கொண்டுள்ளார். அதன்படி வரும் மார்ச் மாதத்தில் இருந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். முக்கியமாக புதிய மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டுவதற்காக 9 மாவட்டங்களுக்கு நேரடியாக செல்கிறார்.

அப்போது அதிமுக நிர்வாகிகளை சந்தித்து பேச உள்ளார். அதேபோன்று மற்ற மாவட்டங்களுக்கும் முதல்வரும், துணை முதல்வரும் நேரில் சென்று குறைகளை கேட்க திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை அறிவிக்கும் முன், தமிழகம் முழுவதும் அதிமுக மாவட்ட நிர்வாகிகளிடம் உள்ள உள்கட்சி மோதலை சரிசெய்ய வேண்டும் என்று கட்சி தலைமை திட்டமிட்டுள்ளது.

Related Stories: