இலங்கை, சிங்கப்பூரில் இருந்து கடத்தல் ரூ44.1 லட்சம் தங்க கட்டிகள் பறிமுதல்: பிடிபட்ட 3 பேரிடம் தீவிர விசாரணை

சென்னை: இலங்கையில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று காலை 3.30 மணிக்கு ஸ்ரீலங்கன் ஏர் லைன்ஸ் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது சென்னையை சேர்ந்த கலந்தர் அப்பாஸ் (34), ஆசிக் தீன் (24) ஆகிய 2 பேர் இலங்கைக்கு போய்விட்டு இந்த விமானத்தில் திரும்பி வந்தனர். இவர்கள் 2 பேரையும் நிறுத்தி சோதனையிட்டனர். பின்னர் தனி அறைக்கு அழைத்து சென்று சோதித்த போது அவர்களது ஆசனவாய்க்குள் தங்க கட்டிகள் மறைத்து வைத்திருந்ததை கண்டு பிடித்தனர். 2 பேர்களிடம் இருந்து 681 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ29.3 லட்சம். 2 பேரையும் கைது செய்தனர்.

அதேபோல் நேற்று காலை 6.30 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து இன்டிகோ ஏர் லைன்ஸ் விமானம் சென்னை வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது திருச்சியை சேர்ந்த முகமது பாஷா (22) சிங்கப்பூருக்கு சுற்றுலா பயணியாக போய் விட்டு இந்த விமானத்தில் திரும்பி வந்தார். அவரை சோதனையிட்டபோது, அவர் அணிந்திருந்த ஜூன்ஸ் பேண்ட் உள்பகுதியில் ரகசிய பை வைத்து தைக்கப்பட்டிருந்ததை கண்டனர். அதனுள் 344 கிராம் தங்க கட்டிகள் இருந்ததை கண்டு பிடித்து பறிமுதல் செய்தனர். மதிப்பு ரூ14.8 லட்சம். இதையடுத்து அவரையும் கைது செய்தனர். கடத்தி வரப்பட்ட 44.1 லட்சம் மதிப்புடைய ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்து 3 பேரிடம் விசாரிக்கின்றனர்.

Related Stories: