உடைந்து போன எங்கள் நெஞ்சை ஒட்ட வைக்க அவர் வருவாரா? அவர் வருவாரா?... ராகுல் மீண்டும் தலைவராக காங். நிர்வாகிகள் விருப்பம்

புதுடெல்லி: ‘‘காங்கிரஸ் தேசிய தலைவராக மீண்டும் ராகுலே பொறுப்பேற்க வேண்டுமென்பதே கட்சியில் பெரும்பாலானோரின் விருப்பம்’’ அக்கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் கூறி உள்ளார். மக்களவை தேர்தலில் 2வது முறையாக காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, அக்கட்சியின் தேசிய தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகினார். இடைக்கால தலைவராக சோனியா காந்தி இருந்து வருகிறார். இதற்கிடையே, ராகுலே மீண்டும் தலைவராக வேண்டுமென கட்சியில் ஒரு தரப்பினரும், உட்கட்சி தேர்தல் நடத்தி தலைவரை தேர்வு செய்ய வேண்டுமென மற்றொரு தரப்பினரும் கூறி வருகின்றனர்.

இதனால், கட்சியில் குழப்பநிலை நீடிக்கிறது. இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் நேற்று அளித்த பேட்டி வருமாறு: காங்கிரஸ் ஓர் மாற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. சோனியா காந்தி தலைமையில் இருப்பதால், கட்சிக்கு தலைமைத்துவ நெருக்கடி எதுவும் இல்லை. இதற்கு முன் கட்சி தலைமையை தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. ஆனால், அது தேவையில்லை என கருதுபவர்களும் கட்சியில் இருக்கிறார்கள். இதுபோன்ற விஷயங்களை மீடியாக்களில் பேசுவது கட்சிக்கு உதவாது.

காங்கிரசை தலைமை ஏற்று வழிநடத்த ராகுல் தான் சரியான நபர் என்றே நாங்கள் அனைவரும் கூறுகிறோம்.  ஆனால், அவர் மீது எங்கள் கருத்தை திணிக்க விரும்பவில்லை. அவர் விரும்பும் நேரத்தில் முடிவெடுக்க போதிய அவகாசத்தை தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ரூ7.77 லட்சம் கோடி வராக்கடன் தள்ளுபடி

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா நேற்று தனது டிவிட்டர் பதிவில், ‘வங்கி கடன் தள்ளுபடி, வராக்கடன் மற்றும் பலவீனமடையும் வங்கி சொத்துகள் தொடர்பான கிரெடிட் சூயிஸ் அறிக்கை அதிர்ச்சி தருகிறது. கடந்த 2014 முதல் மோடி அரசு கடன் தள்ளுபடி செய்துள்ள தொகை ரூ.7.77 லட்சம் கோடி. யார், யாருடைய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது என்ற தகவலை மோடி அரசு ஏன் வெளியிடவில்லை. வராக்கடன் ரூ.9.1 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

தனது தொழிலதிபர் நண்பர்களுக்காக 5 ஆண்டில் ரூ.7.77 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்த மோடி அரசு, ஏன் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யவில்லை? வங்கியில் டெபாசிட் செய்யும் மக்கள் பணத்தை பாதுகாப்பது யாருடைய பொறுப்பு?’ என கேள்வி எழுப்பி உள்ளார்.

Related Stories: