இலங்கைக்கு எதிராக நியூசிலாந்து அசத்தல்

பெர்த்: மகளிர் உலக கோப்பை டி20 தொடரின் ஏ பிரிவில் இலங்கை அணியுடன் மோதிய நியூசிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. வாகா மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீசியது. இலங்கை அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 127 ரன் குவித்தது. கேப்டன் ஜெயாங்கனி அதிகபட்சமாக 41 ரன் விளாசினார். ஹாசினி 20, சஞ்சீவனி 15, மாதவி 27* ரன் எடுத்தனர். நியூசி. பந்துவீச்சில் ஹேலி ஜென்சன் 4 ஓவரில் 16 ரன் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார். அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து 17.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 131 ரன் எடுத்து வென்றது.

பிரீஸ்ட் 6, பேட்ஸ் 13, கிரீன் 29 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். கேப்டனும் தொடக்க வீராங்கனையுமான சோபி டிவைன் 75 ரன் (55 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்), கேத்தி மார்டின் 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஹேலி ஜென்சன் சிறந்த வீராங்கனை விருது பெற்றார். நியூசி. அணி 2 புள்ளிகளை தட்டிச் சென்றது. ஏ பிரிவில் ரன் ரேட் அடிப்படையில் நியூசிலாந்து (1.065) முதலிடத்திலும், இந்தியா (0.85) 2வது இடத்திலும் உள்ளன.

Related Stories: