பணிகள் ஒதுக்கீடு, ஊதியம் வழங்குவதில் குழப்பம் தமிழக காவல்துறையில் அலட்சியம் 15,000 ஊர்க்காவல் படையினர் தவிப்பு: போலீஸ் மானியக்கோரிக்கையில் அரசு கண்டுகொள்ளுமா?

நெல்லை: தமிழகத்தில் ஊர்காவல் படையில் பணியாற்றுவோரின் ஊதியத்தை ஒழுங்குபடுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பணிகள் ஒதுக்கீடு செய்வதில் தொடரும் குழப்பம் காரணமாக 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊர்காவல் படையினர் வாழ்வாதாரம் இன்றி திண்டாடுகின்றனர்.இந்தியாவில் காவல்துறைக்கு துணையாக செயல்படும் அமைப்புகளில் ஹோம் கார்டு என அழைக்கப்படும் ஊர்காவல் படைக்கு முக்கிய இடம் உண்டு. இந்திய - சீன போருக்கு பின்னர் காவல்துறைக்கு உதவிட 1962ம் ஆண்டில் இந்தியாவில் ஊர்காவல் படை உருவாக்கப்பட்டது.பண்டிகை காலங்களில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், திருவிழாக்கள், அரசியல் கட்சிகளின் மாநாடுகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கூட்டத்தை ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளையும் ஊர்காவல் படையினர் செய்து வருகின்றனர். தமிழக காவல்துறையின் பெரும்பான்மையான பணிகளை ஆற்றி வரும் ஊர்காவல் படையினர் ஊதியம் என வரும்போது ‘கருவேப்பிலையாக’ ஒதுக்கப்படுவது காலம்தோறும் நடந்து வருகிறது.தமிழகத்தை பொறுத்தவரை 15 ஆயிரத்து 622 பேர் ஊர்காவல் படையில் இடம் பெற்றுள்ளனர். மற்ற மாநிலங்களில் ஊர்காவல் படையினருக்கு முறையான ஊதியம், பணி ஒதுக்கீடு ஆகியன வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் மட்டும் ஊர்காவல் படையினர் தொடர்ந்து ஊதியம் அடிப்படையில் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.

ஊர்காவல் படையினருக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு நாள் பணிக்கு ₹150 சம்பளமாக வழங்கப்பட்டு வந்தது. அனைவருக்கும் ஒரு மாதத்தில் 25 நாட்கள் வரை பணிகள் வழங்கப்பட்டு வந்தன. தங்களுக்கு ஊதியம் மற்ற மாநிலங்களை விட மிகவும் குறைவு என ஊர்காவல் படையை சேர்ந்தோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இவ்வழக்கில் உச்சநீதிமன்றம் ஊர்காவல் படையினருக்கு ஒருநாள் பணி 8 மணி நேரம் எனவும், ஊதியத்தை ₹150லிருந்து 560 ஆக உயர்த்தியும் உத்தரவு பிறப்பித்தது. ஆனால், ஊர்காவல் படைக்கான ஊதியத்தை ₹560 ஆக உயர்த்திய தமிழக அரசு, அவர்களுக்கான பணி நாட்களை 5 நாட்களாக குறைத்து விட்டது. இதனால் தமிழக ஊர்காவல் படையினர் செய்வதறியாது திகைக்கின்றனர்.இதுகுறித்து ஊர்காவல் படையினர் கூறுகையில், ‘முன்பு எங்களுக்கு மாதம் ஒன்றுக்கு 25 நாட்கள் வரை பணி கிடைத்து வந்தது. ஆனால் இப்போது ஊதியத்தை உயர்த்திவிட்டு பணி நாட்களை 5 என குறைத்துவிட்டனர். இதனால் மாதம் எங்களுக்கு ₹2800 மட்டுமே சம்பளமாக கிடைக்கிறது.’’ என்றனர்.ஊர்காவல் படைக்கு முறையான ஊதியமும், மாதம்தோறும் கூடுதல் நாட்கள் பணியும் வழங்கப்பட வேண்டும். தமிழக சட்டசபையில் காவல்துறை மானியக்கோரிக்கை விரைவில் வர உள்ள சூழலில், அதற்கான அறிவிப்பை எதிர்பார்த்து ஊர்காவல் படையினர் காத்திருக்கின்றனர்.

மாதம் 16 ஆயிரம் சம்பளம் கிட்டுமா?

ஊர்காவல் படையானது காவல்துறையின் பல்ேவறு பணிகளை தோளில் சுமக்கிறது. வயது முதிர்ந்த காவலர்கள் சில பணிகளை ஊர்காவல் படையின் இளைஞர்களை வைத்தே மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு நாள்தோறும் பணியும், மாதம் ₹16 ஆயிரத்து 800 சம்பளமும் வழங்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அமல்படுத்தப்பட்ட நிலையில், தமிழகத்தின் அதை நடைமுறைப்படுத்த இன்று வரை நடவடிக்கை இல்லை.

ஐந்தை பத்தாக்கிய அதிகாரிகள்

ஊர்காவல் படைக்கு ஒருநாள் ஊதியம் ₹560 ஆக உயர்த்தப்பட்ட நாளில் இருந்தே 5 நாள் மட்டுமே பணிக்கு அழைக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் சில மாவட்டங்களில் அந்த பணிக்கும் புதிய வடிவம் கொடுத்து வருகின்றனர். 4 மணி நேரம் டூட்டி என கணக்கிட்டு 10 நாட்கள் பணிக்கு வரவேண்டும் என மாலை நேரங்களில் ஊர்காவல் படையினரை அழைக்கின்றனர். இதனால் அவர்கள் மனம் நொந்த நிலையில் காணப்படுகின்றனர்.

Related Stories: