ரெனால்ட் சிட்டி கே-இசட் இ

பிரெஞ்ச் நாட்டை சேர்ந்த ரெனால்ட் நிறுவனம் அதன் புகழ்வாய்ந்த க்விட் மாடலில் உருவாக்கிய ஹேட்ச்பேக் ரக மின்சார கார்தான் கே-இசட் இ. இந்த காரைதான் அந்நிறுவனம் நடப்பாண்டின் ஆட்டோ எக்ஸ்போவில் இந்தியாவில் களமிறக்கும் விதமாக காட்சிப்படுத்தியது. இந்த காரை இந்நிறுவனம் கடந்த ஆண்டு ஷாங்காயில் நடைபெற்ற ஆட்டோ கண்காட்சியில் முதல் முறையாக காட்சிப்படுத்தியது. இதையடுத்து, 2வது முறையாக இந்தியாவில் காட்சிப்படுத்தியுள்ளது. இந்த மாடலை இப்போதைக்கு சீனாவில் மட்டுமே விற்பனை செய்ய இருப்பதாக ரெனால்ட் அறிவித்துள்ளது. இந்த காருக்கான எதிர்பார்ப்பு சீனாவில் அதிகரித்துள்ளது. பின் வரும் காலங்களில் இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளில் களமிறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காரில் 33kW மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது, அதிகபட்சமாக 120 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும். இந்த காரை 220 வோல்ட் கொண்ட சாதாரண சார்ஜிங் பாயிண்டில் வைத்துகூட சார்ஜ் செய்ய முடியும். ஆனால், இதில் முழுமையான சார்ஜை அடைய அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். அதுவே, டிசி பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்யும்போது 80 சதவீத சார்ஜை வெறும் 50 நிமிடங்களிலேயே தொட்டுவிடும். முழு சார்ஜ் நிலையில் இந்த கார் 240 கி.மீ. தூரம் வரை பயணிக்கும்.

Related Stories: