×

எந்த சாலைகளில் எந்த வாகனம் எவ்வளவு வேகத்தில் செல்ல வேண்டும்; வேகக்கட்டுப்பாடு நிர்ணயம் செய்தது மத்திய அரசு

டெல்லி: இந்தியாவில் சாலைகளில் வாகனங்களை இயக்குவதற்கான வேகக்கட்டுப்பாடு அளவை மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது. இந்தியாவில் எந்த எந்த சாலையில் எந்த எந்த வாகனங்கள் எவ்வளவு வேகத்தில் செல்லலாம் என்று  மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை நிர்ணயம் செய்துள்ளது. இது குறித்து 2018-ம் ஏப்ரல் மாதம் சுற்றறிக்கை ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது. அந்த பட்டியலின்படி, வாகனங்கள் சாலையில் செல்ல வேண்டிய  வேகங்கள் வரையறை செய்யப்பட்டுள்ளது.

கார்கள் விரைவுச்சாலையில் 120 கி.மீட்டர் வரையிலும், நாற்கரச்சாலையில் 100 கி.மீட்டர் வேகம் வரையிலும் செல்லலாம். நகராட்சி மற்றும் பிற சாலைகளில் 70 கி.மீட்டர் வேகம் வரை கார்களை இயக்கலாம். பேருந்துகள் உள்ளிட்ட  பயணிகளை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் விரைவுச்சாலையில் 100 கி.மீட்டர் வரையிலும், நாற்கரச்சாலையில் 90 கி.மீட்டர் வேகம் வரையிலும் செல்லலாம். நகராட்சி மற்றும் பிற சாலைகளில் 60 கி.மீட்டர் வேகம் வரை பேருந்துகளை  இயக்கலாம். லாரி உள்ளிட்ட சரக்கு ஏற்றிச்செல்லும் வாகனங்கள், விரைவுச்சாலையில் 80 கி.மீட்டர் வரையிலும், நாற்கரச்சாலையில் 80 கி.மீட்டர் வேகம் வரையிலும் அதிகப்பட்சமாக இயக்க வேண்டும். நகராட்சி மற்றும் பிற சாலைகளில் 60  கி.மீட்டர் வேகத்திற்கு மேல் இயக்கக்கூடாது.

இருசக்கர வாகனங்கள் விரைவுச்சாலையில் 80 கி.மீட்டர் வரையிலும், நாற்கரச்சாலையில் 80 கி.மீட்டர் வேகம் வரையிலும் இயக்கலாம். நகராட்சி மற்றும் பிற சாலைகளில் 60 கி.மீட்டர் வேகம் வரை இயக்கலாம். 3 சக்கர வாகனங்களை   விரைவு மற்றும் நாற்கரச்சாலையில் இயக்கக்கூடாது. இதனை தவிர அனைத்து சாலைகளிலும் 50 கி.மீட்டர் வேகம் வரை இயக்கலாம். வேகக்கட்டுப்பாடு கருவி பொருத்த அரசு வலியுறுத்தி வரும் நிலையில், விபத்துகள் நடப்பது பொதுமக்கள்  மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. வேகக்கட்டுப்பாடு கருவி பொருத்தாமல் பயணம் செய்வதுதான், விபத்துகள் நடப்பதற்கு காரணம் என போக்குவரத்து அதிகாரிகள், சமூக ஆர்வலர்களின் கருத்தாகவுள்ளது.

Tags : roads ,Central Government ,road , How fast any vehicle should go on which road; The Central Government has set the pace
× RELATED ரயில், பேருந்து பயணத்தின்போது சலுகை...