100 நாள் திட்டத்தில் ரூ.12 கோடி மோசடி?: விசாரணை நடத்த விவசாய சங்கம் வலியுறுத்தல்

சிவகங்கை:  நூறு நாள் வேலை திட்டத்தில் ரூ.12 கோடி வரை மோசடி நடைபெற்றதாக சமூக தணிக்கைக்குழு வெளியிட்ட அறிக்கை குறித்து, விசாரணை நடத்த வேண்டுமென விவசாய தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. சிவகங்கையில் தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்டத்தலைவர் தண்டியப்பன் தலைமை, செயலாளர் மணியம்மா முன்னிலை வகித்தனர். மாநில துணைச்செயலாளர் பூங்கோதை, மாநில துணைத்தலைவர் சின்னத்துரை, மாவட்ட துணைத்தலைவர் வேணுகோபால், மாவட்ட துணைச்செயலாளர் முத்துக்கருப்பன், மாவட்ட பொருளாளர் வேங்கையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், சிவகங்கை மாவட்டத்தில், கடந்த 2017-18ம் ஆண்டு 445 ஊராட்சிகளில் சமூக தணிக்கை குழு ஆய்வு நடத்தியது. அப்போது, ரூ.2 கோடியே 32 லட்சம் பண மோசடி நடந்துள்ளதை இக்குழு உறுதி செய்துள்ளது. ரூ.36 கோடியே 93 லட்சத்து 94 ஆயிரம் முறையற்ற முறையில் செலவு செய்துள்ளதையும் இக்குழு கண்டறிந்துள்ளது. இதேபோல் 2018-19ல் ரூ.10 கோடியே 64 லட்சம் மோசடி நடந்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. ரூ.56 கோடியே 75 லட்சத்து 45 ஆயிரம் முறையற்ற முறையில் செலவு செய்ததாக தெரிய வந்துள்ளது. மோசடி தொடர்பாக ஒரு வழக்கு கூட பதிவு செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே சமூக தணிக்கைக்குழு அறிக்கை குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் பணிகள்  வழங்கப்பட்ட விதம், முறையாக கூலி தரப்பபடுகிறதா, எத்தனை நாட்கள் பணிகள்  நடந்தன என்பதை கண்காணிப்பதற்காக மாநில அரசு சார்பில் சமூக தணிக்கைக்குழு  அமைக்கப்பட்டுள்ளது. இந்தக்குழு சிவகங்கை மாவட்டத்தில், 2017-18 மற்றும் 2018-19ல், 100  நாள் வேலைத்திட்டம் தொடர்பாக சமூக தணிக்கை நடத்தியது. இதில் ரூ.12 கோடி  வரை மோசடி நடந்துள்ளது தெரிய வந்தது. எனவேதான், நேற்றைய கூட்டத்தில்  இதுதொடர்பாக விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.

Related Stories: