தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து கருத்து தெரிவித்த விவகாரம்: நேரில் ஆஜராக விலக்கு கேட்டு நடிகர் ரஜினிகாந்த் மனுதாக்கல்!

தூத்துக்குடி: தூத்துக்குடியில் கடந்த 2018 மே மாதம் நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. இதில் நடந்த தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். அப்போது, பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க தூத்துக்குடி வந்த நடிகர் ரஜினிகாந்த் அளித்த பேட்டியில், தூத்துக்குடியில் நடந்த போராட்டம், கலவரத்தில் தீயசக்திகள் ஊடுருவி உள்ளனர் என்று எனக்கு தெரியவந்துள்ளது என்று கூறினார். நடிகர் ரஜினிகாந்தின் இந்த கருத்துகளால் அவரையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

இதனிடையே இந்த சம்பவம் குறித்து உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைத்து அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த ஒரு நபர் ஆணையம் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தூத்துக்குடியில் விசாரணை நடத்தி வருகிறது. இதுவரையில் 18 கட்ட விசாரணை முடிந்து, 704 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதில் 445 பேரிடம் ஆணையம் விசாரணை நடத்தி அவர்களது வாக்குமூலங்களை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் 19வது கட்ட விசாரணை, வருகிற 24ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடக்கிறது. விசாரணைக்கு ஆஜராக வேண்டி பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட 25 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.

குறிப்பாக வருகிற 25ம் தேதி தூத்துக்குடியில் நடக்கும் ஒரு நபர் ஆணைய விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என நடிகர் ரஜினிகாந்துக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், தனக்கு படப்பிடிப்பு வேலைகள் இருப்பதால் ஆஜராக முடியாத நிலை இருப்பதாகவும் எனவே, தனக்கு ஆஜராவதில் இருந்து விலக்க அளிக்க வேண்டும் என்று கோரி வழக்கறிஞர் இளம்பாரதி மூலம் ரஜினி மனு அளித்துள்ளார். மேலும், ரசிகர்கள் அதிகளவில் கூடி சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் நேரில் ஆஜராக விலக்கு தேவை என அவர், மனுவில் குறிப்பிட்டுள்ளார். தனக்கான கேள்விகளை எழுத்து மூலம் தந்தால் அதற்கு பதில் தர தயாராக இருப்பதாகவும், அதனை சாட்சியமாக ஆணையத்தின் ஆவணங்களில் பதிவு செய்து கொள்ளலாம் எனவும் ரஜினி கூறியுள்ளார்.

Related Stories: