×

பல்வேறு துறைகளில் பெரும் சாதனையாளராக திகழ்ந்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி

திருச்செந்தூர்: திருச்செந்தூரில் பத்திரிக்கை அதிபர் சி.ப. சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் 1 கோடியே 34 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் செலவில் 60 சென்ட் நிலத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் அமைக்கப்பட்டது. இந்நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் மணி மண்டப திறப்பு விழா இன்று தொடங்கியது.

அப்போது, பா.சிவந்தி ஆதித்தனார் மணி மண்டபத்தை ரிப்பன் வெட்டி முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார். பின்னர், பா.சிவந்தி ஆதித்தனார் புகைப்படத்திற்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அத்துடன் பா.சிவந்தி ஆதித்தனார் மணி மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்தை முதலமைச்சர் பார்வையிட்டார். பின்னர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா புகைப்படங்களுக்கு முதலமைச்சர், துணை முதல்வர், அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இதையடுத்து பா.சிவந்தி ஆதித்தனார் முழு உருவச் சிலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இந்த விழாவில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், வாரியத்தலைவர்கள், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள், டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் வாழ்க்கை வரலாறு

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார், சி.பா.ஆதித்தனார்- கோவிந்தம்மாள் இணையருக்கு 2-வது மகனாக 1936-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24-ந்தேதி பிறந்தார். ராமகிருஷ்ணா உயர்நிலைப்பள்ளியில் படித்தபின் மாநிலக் கல்லூரியில் படிப்பைத் தொடர்ந்து பி.ஏ. பட்டம் பெற்றார். கல்லூரியில் படிக்கும்போதே தேசிய மாணவர் படை(என்.சி.சி.) தளபதியாக இருந்ததுடன் சென்னை மாநகரில் உள்ள அனைத்துக் கல்லூரிகளின் என்.சி.சி. படைகளுக்கு தலைவராக நியமிக்கப்பட்டார்.

இந்திய துணைக்கண்டத்தில் பத்திரிகை, விளையாட்டு, கல்வி, தொழில் முதலான பல்வேறு துறைகளிலும் பெரும் சாதனையாளராகத் திகழ்ந்தவர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்.சி.பா.ஆதித்தனார் 1942-ம் ஆண்டு தினத்தந்தி நாளிதழைத் தொடங்கினார். தந்தையை பின்பற்றி பத்திரிகைத் துறையில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் ஈடுபட்டார். அச்சுக் கோர்ப்பவர், அச்சிடுபவர், பார்சல் கட்டி அனுப்புகிறவர், பிழை திருத்துபவர், நிருபர், துணை ஆசிரியர் என பத்திரிகையின் அனைத்து துறைகளிலும் பயிற்சி பெற்றார்.

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் 1959-ம் ஆண்டு, ‘தினத்தந்தி’யின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றார். அந்த சமயத்தில் சென்னை, மதுரை, திருச்சி ஆகிய மூன்று இடங்களில் இருந்து மட்டுமே தினத்தந்தி வெளிவந்து கொண்டிருந்தது. டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் நிர்வாகத் திறமையால், தினத்தந்தி நாளுக்கு நாள் வளர்ந்து, இப்போது பெங்களூரு, மும்பை, புதுச்சேரி உள்பட 18 நகரங்களில் இருந்து வெளிவருகிறது. திருச்செந்தூரில் சி.பா.ஆதித்தனார் நிறுவிய கல்லூரியை பல்கலைக்கழக அளவுக்கு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உயர்த்தினார்.

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் என்ஜினீயரிங் கல்லூரி, கோவிந்தம்மாள் ஆதித்தனார் பெண்கள் கல்லூரி, ஆதித்தனார் கல்லூரி ஆகியவற்றின் தலைவராகவும், டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி, டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி ஆகியவற்றின் நிறுவனத் தலைவராகவும் இருந்துவந்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் செனட் உறுப்பினராகவும், சென்னை பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

பத்திரிகை, விளையாட்டு, கல்வி ஆகிய துறைகளில் செய்த சேவையைப் பாராட்டி இவருக்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் 1994-ம் ஆண்டு நவம்பர் 23-ந் தேதி டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தது.
அண்ணாமலை பல்கலைக்கழகம் 1995-ம் ஆண்டிலும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் 2004-ம் ஆண்டிலும், சென்னை பல்கலைக்கழகம் 2007-ம் ஆண்டிலும் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது. 1982, 1983 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து 2 முறை சென்னை மாநகர ஷெரீப் ஆக நியமிக்கப்பட்டார்.

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் கைப்பந்தாட்டத்தில் மிகுந்த முனைப்பு உடையவர். இந்திய கைப்பந்து விளையாட்டு சங்கத் தலைவராகவும், இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவராகவும் பணியாற்றியவர். இலக்கியம் மற்றும் கல்வித் துறையில் சிறந்த சேவை புரிந்ததற்காக டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மத்திய அரசு 2008-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் 2013-ம் ஆண்டு ஏப்ரல் 19-ந் தேதி இயற்கை எய்தினார்.

Tags : Pasivanthi Adithanar Manimandapam ,first ,Palanisamy ,event , Thiruchendur, Shivanthi Adityanar, Manimandapam, CM, Edappadi Palanisamy, Pannirselvam
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...