ரொம்ப ரொம்ப ஓவரா போயிட்டு இருக்கு தங்க விலை .. சவரன் ரூ.32,576க்கு வந்துருச்சு.. உயர்வுக்கு என்னதான் காரணம் ? : பரிதாபத்தில் நடுத்தர மக்கள்

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 168 உயர்ந்து ரூபாய் 32 ஆயிரத்து 576க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுவே தங்க விலை வரலாற்றில் புதிய உச்சம் ஆகும். நேற்று ரூ.4000ஐ தாண்டிய கிராமின் விலை, இன்று  ரூபாய் 21 உயர்ந்து, ரூபாய் 4,072க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனிடையே வரும் நாட்களில் இன்னும் விலை அதிகரிக்க தான் வாய்ப்புள்ளது என்று நகை வியாபாரிகள் கூறியுள்ளனர். இந்த விலை உயர்வு நடுத்தர மக்களை கலக்கமடைய செய்துள்ளது.

விலை உயர்வுக்கான 3 காரணங்கள்

*கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக பல  நாடுகளில் உற்பத்தி பாதிப்படைந்துள்ளது. அதனால் உற்பத்தி துறையை சார்ந்த பங்கு சந்தைகள் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் தற்போது தங்கத்தின் மீது முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர். அதனால், உலக சந்தையில் தங்கம் விலை உயர்ந்து வருகிறது.

*இரண்டாவதாக, இந்த ஆண்டு இறுதியில் அதாவது, நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.அதுவரை அமெரிக்காவில் பங்கு சந்தையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாது. அதனால், அங்குள்ள முதலீட்டாளர்களும், தங்கத்தின் மீது முதலீடு செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.

* மூன்றாவதாக, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு பெருமளவில் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதனால், தொடர்ந்து உள்நாட்டு சந்தையில் தங்கம் விலை உயர்ந்து வருகிறது.

இனிமேலும் விலை உயரும். விலை உயர்ந்த போதிலும் வியாபாரம் என்பது பாதிக்கப்படவில்லை. வழக்கம் போல் தான் வியாபாரம் நடந்து வருகிறது. தங்கம் விலை உயர்வால் ஏற்கனவே, தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் சந்தோஷத்தில் உள்ளனர். நல்ல ரிசல்ட் கிடைத்துள்ளதால், அவர்கள் இன்னும் தங்கத்தில் அதிக அளவில் முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர். வரும் நாட்களில் தங்கம் விலை இன்னும் உயர தான் வாய்ப்புள்ளது.

புதிய உச்சத்தில் தங்கம் விலை..

தங்கம் விலையில் கடந்த அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதத்தில் ஏற்றம், இறக்கம் நிலை காணப்பட்டது.புத்தாண்டு தினத்தன்று சவரன் ரூ.29,880க்கு விற்கப்பட்டது. தொடர்ந்து ஜனவரி 3ம் தேதி சவரனுக்கு ரூ.632 அதிகரித்து ஒரு சவரன் ரூ.30,520க்கும் விற்கப்பட்டது. இந்த விலை உயர்வு என்பது தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்ச விலையாக இருந்தது. இந்த நிலையில் கடந்த 15ம் தேதி ஒரு சவரன் ரூ.31,216க்கும் விற்கப்பட்டது. தொடர்ந்து 18ம் தேதி ஒரு சவரன் ரூ.31,408, 19ம் தேதி ரூ.31,720க்கும் விற்கப்பட்டது.

நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.3,978க்கும், சவரன் ரூ.31,824க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை தங்கம் விலை மேலும் அதிரடியாக உயர்ந்தது. அதாவது, சவரனுக்கு ரூ.584 அதிகரித்து ரூ.32,408க்கும் விற்கப்பட்டது. தங்கம் விலை கிராம் ரூ.4 ஆயிரத்தை தாண்டியது. இந்நிலையில் இன்று சவரன் ரூ.32,500ஐ தாண்டி விற்பனை ஆகி வருகிறது. இதற்கு முன்னர் இருந்த விலை உயர்வு சாதனை அனைத்தையும் இந்த விலை முறியடித்துள்ளது. வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூபாய் 100 குறைந்து ரூபாய் 52,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ரூபாய் 52.40க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: