தூக்கிடும் தேதி நெருங்குவதால், குடும்பத்தினருடனா கடைசி சந்திப்பு தொடர்பாக நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கும் திகார் சிறைத் துறை கடிதம்

புதுடெல்லி: குடும்பத்தினருடனா கடைசி சந்திப்பு தொடர்பாக நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கும் திகார் சிறைத் துறை கடிதம் எழுதியுள்ளது. குடும்பத்தினர்களை எப்போது சந்திக்க விரும்புகிறீர்கள் என விருப்பத்தை கேட்டு எழுத்துப்பூர்வமாக சிறை நிர்வாகம் குற்றவாளிகளுக்கு கடிதம் எழுதியுள்ளது.

மார்ச் 3ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கு தண்டனை

*டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா(23) கடந்த 2012ம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார்.

* இதையடுத்து வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட அக்ஷய் சிங் தாக்கூர், முகேஷ் சிங், பவன் குப்தா மற்றும் வினய் சர்மா ஆகிய 4 குற்றவாளிகளையும் கடந்த 1ம் தேதி தூக்கில் போடுவதற்கு டெல்லி விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

*ஆனால் குற்றவாளிகள் தரப்பில் நீதிமன்றத்தில் புதிய மனுக்களை தாக்கல் செய்ததால், தண்டனையை நிறைவேற்றுவதில் சட்டரீதியான சிக்கல் ஏற்பட்டதால் அதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

*இதில் கருணை கேட்டு தாக்கல் செய்த மனுக்கள் அனைத்தையும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்து உத்தரவிட்டார்.

*இந்த நிலையில், “நிர்பயா, பாலியல் வழக்கில் கொலை குற்றவாளிகள் நான்கு பேருக்கும் வரும் மார்ச் 3ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற வேண்டும்’’ என்று, புதிய தேதியை வெளியிட்டு டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டது.

*மேலும் இதுதொடர்பான ஆணை சிறை நிர்வாகத்திற்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டதால், தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் திகார் சிறையில் நடந்து வருகிறது.

*இதற்கிடையில் குற்றவாளிகளில் ஒருவனான வினய் சர்மா, சுவரில் தலையை மோதி காயம் ஏற்படுத்திக் கொண்டதால், தூக்கு தேதி அறிவிக்கப்பட்டது முதல் அவர் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் ஏ.பி.சிங்., கோர்ட்டில் மனு அளித்திருந்தார்.

* இதனையடுத்து குற்றவாளிகள் 4 பேருக்கும் நேற்று (பிப்.,21) சிறையில் மனநல ஆலோசனை வழங்கப்பட்டது.

சிறை நிர்வாகம் குற்றவாளிகளுக்கு கடிதம்

இந்நிலையில், தூக்கிடும் தேதி நெருங்குவதால், தூக்கு கைதிகள் 4 பேரும் கடைசியாக தங்கள் குடும்பத்தினர்களை எப்போது சந்திக்க விரும்புகிறீர்கள் என விருப்பத்தை கேட்டு எழுத்துப்பூர்வமாக சிறை நிர்வாகம் குற்றவாளிகளுக்கு கடிதம் எழுதியுள்ளது. இவர்களில் முகேஷ் மற்றும் பவன் ஆகியோர் இதற்கு முன்பு பிப்.,1 அன்று தூக்கு தண்டனை நிறைவேற்ற தேதி அறிவிக்கப்பட்டிருந்ததால் ஏற்கனவே தங்கள் குடும்பத்தினரை சந்தித்து விட்டதாக சிறைத்துறையிடம் கூறி உள்ளனர். எஞ்சிய குற்றவாளிகளான அக்ஷய் மற்றும் வினய் ஆகியோர் தற்போது குடும்பத்தினரை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக திகார் சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: