×

கொருக்குப்பேட்டையில் பீக்அவர்சில் மக்கள் கடும் அவதி ஓவர் லோடு.. நடுவழியில் சரக்கு ரயில் சரண்டர்: கேட்டை திறக்க முடியாததால் 5 கி.மீ.க்கு அணிவகுத்த வாகனங்கள்

தண்டையார்பேட்டை: அதிக அளவில் பாரம் ஏற்றப்பட்டதால் சரக்கு ரயில்  நடுவழியில் நின்றது.  இதனால் கொருக்குப்பேட்டை பகுதியில் ரயில்வே கேட்டை கடந்து செல்ல முடியாமல் மாணவர்கள், பொதுமக்கள் அவதிப்பட்டனர். வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து பல்வேறு பொருட்களை கொண்டு வரும் சரக்கு ரயில்கள் தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை வழியாக வியாசர்பாடியில் உள்ள குடோனுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.  இந்நிலையில், நேற்று காலை 9 மணிக்கு வெளியூரில் இருந்து பொருட்களை ஏற்றிக்கொண்டு சரக்கு ரயில் ஒன்று வியாசர்பாடிக்கு சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் கொருக்குப்பேட்டை நேருநகர் ரயில்வே கேட்டை கடந்தபோது, திடீரென பழுதாகி நடுவழியில் நின்றது.  இதனால், கேட்டை திறக்க முடியாத நிலை ஏற்பட்டதால் நேரு நகர், கருணாநிதி நகர், நேதாஜி நகர், குமரன் நகர், கார்நேசன் நகர், ஜெ.ஜெ.நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பள்ளிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்வோர் ரயில்வே கேட்டை கடந்து செல்ல முடியாமல் தவித்தனர்.

மேலும் திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, மணலி, கொருக்குப்பேட்டை, மூலக்கொத்தளம், கொடுங்கையூர், வியாசர்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த வாகனங்கள், சாலையின் இருபுறமும் 5 கிமீ தூரத்துக்கு அணிவகுத்து நின்றதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பொதுமக்கள், வாகன ஓட்டிகள், ரயில்வே ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தண்டையார்பேட்டையில் இருந்து மற்றொரு ரயில் இன்ஜின் கொண்டு வரப்பட்டு சரக்கு ரயில் இழுத்து செல்லப்பட்டது. அதன்பிறகு ரயில்வே கேட் திறக்கப்பட்டு வாகனங்கள் சென்றன. இந்த சம்பவத்தால் எண்ணூர், கத்திவாக்கம், தண்டையார்பேட்டை நெடுஞ்சாலைகளில் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘பள்ளி நேரத்தில் ரயில்வே கேட் மூடப்படுவதால் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இப்பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தன்பேரில் கடந்த 4 ஆண்டுக்கு முன்பு மேம்பாலம் கட்டி தருவதாக அதிமுக அரசு கூறியது. இதற்காக மண் பரிசோதனையும் செய்யப்பட்டது, ஆனால் திட்டம் கைவிடப்பட்டது. மக்கள் நலன் கருதி கிடப்பில் போடப்பட்ட இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர். ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘‘சரக்கு ரயிலில் அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றபட்டதால், அதை இழுத்து செல்லும் திறன் குறைந்து இன்ஜின் பழுதானது. இதனால், நடுவழியில் ரயில் நின்றுவிட்டது. மாற்று இன்ஜின் கொண்டு வரப்பட்டு, சரக்கு ரயிலை அங்கிருந்து எடுத்து சென்றுள்ேளாம். இனிவரும் காலங்களில் இதுபோல் நடைபெறாமல் தவிர்க்கப்படும்,’’ என்றனர்.



Tags : Korukkupettai Peak Avars ,
× RELATED ரேஷன் பொருள் கடத்தல் வழக்கில்...