கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தின் கீழ் மந்தகதியில் பொழுதுபோக்கு பூங்கா பணி: பொதுமக்கள் ஏமாற்றம்

ஆலந்தூர்: கிண்டி ஜிஎஸ்டி சாலை சந்திப்பில் கடந்த 2008ம் ஆண்டு கத்திப்பாரா மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த மேம்பாலத்தின் கீழ், 4 சர்வீஸ் சாலைகள், பாதசாரிகளின் வசதிக்காக  2 சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டது. இந்த சுரங்கப்பாதையில் இரவு நேரங்களில் குடிமகன்களின் அட்டகாசம் மற்றும் மின்  விளக்குகள் சரிவர எரியாததால் பொதுமக்கள் இதனை பயன்படுத்துவதை தவிர்த்தனர். இதனால், ஒரு சுரங்கப்பாதை மூடப்பட்டது. இந்த நிலையில் இந்த மேம்பாலத்தின் கீழ் காலியாக உள்ள பல ஏக்கர் இடத்தில், ரூ.18  கோடியே 59 லட்சம்  மதிப்பீட்டில்  கலையரங்கம், திரையரங்கம், வண்ண விளக்குகளால் ஆன நீர்வீழ்ச்சி, நடைபயிற்சி மேடை, உணவு கடைகள்,  பேருந்து  நிலையம் உள்ளிட்ட வசதிகளுடன் பொழுதுபோக்கு பூங்கா அமைக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்தது.  அதற்கான பூமி பூஜை கடந்த 2018ம் ஆண்டு ஜூலை மாதம் 27ம் தேதி நடந்தது. இந்த பணிகள்,  365 நாட்களில் முடிக்கப்படும்  என  மெட்ரோ ரயில் நிர்வாகம் அப்போது  அறிவித்து இருந்தது.  

இதனையடுத்து   சுற்றிலும் தடுப்பு வேலி அமைத்து தரையை  சமன்படுத்தும் பணி நடந்தது.  பின்னர் சிறு, சிறு பில்லர்கள் அமைக்கும் பணி நடந்தது. சில இடங்கள் மணல் கொட்டி மேடாக்கப்பட்டது.  கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்த பணிகளை தவிர வேறு பணி நடைபெவில்லை. தற்போது, ஆங்காங்கே  மணல் கொட்டியும், கற்களை ஆங்காங்கே சிதற விட்டும்  பொலிவிழந்து அலங்கோலமாக காணப்படுகிறது.பொழுதுபோக்கு பூங்கா  விரைவில் வரும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது. முறையாக திட்டமிடாததே இதற்கு  காரணம் என்றும் மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.  ஒப்பந்த பணி நிறைவேற கொடுக்கப்பட்ட காலக்கெடு முடிவடைந்த போதும்    பணிகள் மந்தமாகவே நடந்து வருகிறது. இந்த பணியினை விரைந்து முடிக்க  மெட்ரோ ரயில்  நிர்வாகம், சம்மந்தப்பட்ட  ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட வேண்டும்  என்பது  பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

இதுகுறித்து மெட்ரோ ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:பொழுதுபோக்கு பூங்கா பணிகளை குறிப்பிட்ட காலத்தில் முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால், பணிகள் தொடங்கப்பட்ட பிறகு நில அளவை செய்வதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக சிறிது மாதங்கள் பணி நிறுத்தப்பட்டது. இந்தநிலையில், தற்போது மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு முழுமையாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். இவ்வாறு கூறினார். 

Related Stories: