போர்க்குற்றவாளிகளை காக்க இலங்கை சதி ஈழத் தமிழர்களுக்கு இந்தியா நீதி வழங்குமா?: அன்புமணி கேள்வி

சென்னை: போர்க்குற்றவாளிகளை காக்க சதி ெசய்யும் இலங்கையிடம் இருந்து ஈழத் தமிழர்களை காத்து இந்தியா நீதி வழங்குமா என்று பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: இலங்கைப் போர் முடிந்து 10 ஆண்டுகளுக்கு மேலாகி விட்ட நிலையில்,  தமிழர்களின் பகுதிகளிலிருந்து படைகள் இன்னும் விலக்கப்படவில்லை நிலங்கள் ஒப்படைக்கப்படவில்லை. கோத்தபாய அதிபரான பிறகு  மதச் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன. இலங்கை விடுதலை நாள் விழாவில் தமிழ் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. இவற்றை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் அவரது அறிக்கையில்  சுட்டிக்காட்டியுள்ளார். இத்தகைய சூழலில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைகளும், அத்துமீறல்களும் அதிகரிக்குமே தவிர, நீதி நிலைநாட்டப்படாது என்பது தான் மறுக்க முடியாத உண்மை.

இத்தகைய சூழலில் ஈழத்தமிழர்களுக்கு நீதி பெற்றுத்தர வேண்டிய கடமையும் பொறுப்பும் இந்தியாவுக்கு உண்டு. ஒன்றரை லட்சம் ஈழத்தமிழர்களை படுகொலை செய்த போர்க்குற்றவாளிகள் தப்பிவிடாமல் இந்தியா தடுக்க வேண்டும். இலங்கை போர்ப்படை தளபதியான ஷவேந்திர சில்வா ஒரு போர்க்குற்றவாளி என்று கூறி அவரை அமெரிக்காவுக்குள் அனுமதிக்க அந்நாட்டு அரசு மறுத்து விட்டதன் மூலம், ஈழத்தமிழருக்கு நீதி பெற்றுத் தருவதில் தங்களுக்குள்ள அக்கறையை வெளிப்படுத்தியுள்ளது. அதேபோல், இந்தியாவும் ஈழத்தமிழர்கள் மீதான அதன் அக்கறையை உலகிற்கு வெளிப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது.அதன்படி, ஐ.நா. மனித உரிமை ஆணையர் அவரது அறிக்கையை வரும் 27ம் தேதி மனித உரிமை பேரவையில் தாக்கல் செய்த பின்னர் நடைபெறும் விவாதத்தில், இலங்கை போர்க்குற்ற விசாரணை முழுமையாக நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்று இந்தியா வலியுறுத்த வேண்டும். விசாரணையிலிருந்து வெளியேறத் துடிக்கும் இலங்கைக்கு இந்தியா கண்டனம் தெரிவிப்பதுடன், போர்க்குற்ற  விசாரணையை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும். போர்க்குற்றங்களை விசாரித்து ஆவணப் படுத்துவதற்கான சர்வதேச பொறிமுறையை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி நட்பு நாடுகளுடன் இணைந்து ஐ.நா. மனித உரிமை பேரவையில் இந்தியா தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். ஐ.நா. மனித உரிமை பேரவையின் தீர்மானத்தை முடித்துவைக்க வேண்டும் என்ற புதிய தீர்மானத்தை பாகிஸ்தான் போன்ற நாடுகளின் உதவியுடன் இலங்கை கொண்டு வந்தால், இந்தியா அதற்கு எதிராக வாக்களித்து முறியடிக்க வேண்டும். இவ்வாறு அன்புமணி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: