×

வெளிநாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதால் பீதி ஆட்டம் காண்கிறது ஆசிய பங்குச்சந்தை: தென் கொரியாவில் ஒரே நாளில் 100 பேருக்கு பாதிப்பு

ஹாங்காங்: சீனாவை தொடர்ந்து தென் கொரியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவத் தொடங்கி உள்ளது. அந்நாட்டில் நேற்று ஒரே நாளில் 100 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது தவிர ஜப்பான் உள்ளிட்ட பிற நாடுகளிலும் வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதன் பீதியால், ஆசிய பங்குச்சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டது. சீனாவின் ஹூபெய் மாகாணம், வுகான் நகரில் உருவாகிய கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் 25 நாடுகளில் பரவியிருக்கிறது. வைரஸ் பரவுவதை தடுக்க சீன அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதனால், கடந்த 3 நாட்களாக புதிதாக வைரஸ் பாதிப்புக்கு உள்ளாவோர் எண்ணிக்கை குறைந்து வந்தது. இது, சீனாவுக்கு நிம்மதி அளித்தது.ஆனால், இந்நாட்டில் உள்ள சிறைச்சாலைகளிலும் கொரோனா பரவியிருக்கும் அதிர்ச்சித் தகவல் நேற்று வெளியானது. அங்குள்ள 4 சிறைச் சாலைகளில் 200 பெண் கைதிகள் உட்பட 512 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது நேற்று உறுதி  செய்யப்பட்டது. இதனால், நேற்று மட்டும் இந்நாட்டில் வைரஸ் உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 1109 ஆக அதிகரித்தது. அதேபோல் பலியானோர் எண்ணிக்கை 118 ஆக இருந்தது.  நாட்டின் மொத்த பலி எண்ணிக்கை 2236 ஆக அதிகரித்துள்ளது. 75,000 பேர் வைரஸ் பாதிப்புடன் சிகிச்சை பெ்றுகின்றனர்.இதற்கிடையே, சீனாவுக்கு அடுத்தபடியாக, கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள நாடாக தென் கொரியா மாறியுள்ளது. இந்நாட்டில் நேற்று ஒரே நாளில் 100 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.இதனால், இங்கு வைரஸ் பாதிப்புள்ளோர் எண்ணிக்கை 204 ஆக அதிகரித்துள்ளது.

டேகு நகரில் ஷின்சேயான்ஜியில் உள்ள தேவாலயத்திற்கு 61 வயது மூதாட்டி ஒருவர் பிப்ரவரி 10ம் தேதி காய்ச்சலுடன் சென்றிருக்கிறார். பின் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதே நாளில் அந்த தேவாலயத்துக்குப் போன 39 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  ஷின்சேயான்ஜி, தென் கொரியாவின் நான்காவது பெரிய நகரம். 25 லட்சம் மக்கள் வாழும் இந்த நகரில், கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால், பொதுமக்கள் இருப்பிடங்களிலேயே முடங்கியுள்ளனர். தென் கொரியா மட்டுமின்றி ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா வேகமாக பரவத் தொடங்கி உள்ளது. ஏற்கனவே தென் கொரியா, பிரான்ஸ், பிலிப்பைன்ஸ், தாய்வான் மற்றும் ஹாங்காங்கில் கொரோனா வைரஸ் பலி ஏற்பட்டுள்ள நிலையில் ஈரானிலும் 2 பேர் இறந்துள்ளது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அங்கு 3 பேர் வைரஸ் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனா தவிர மற்ற நாடுகளில் இதுவரை பலி எண்ணிக்கை 11 ஆக உள்ளது. ஜப்பான் துறைமுகத்தில் நிற்கும் டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் 80 வயது மூதாட்டி ஒருவரும் இறந்துள்ளார். இதனால் அக்கப்பலில் பலியானோர் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. சீனாவுக்கு பிறகு இக்கப்பலில் தான் அதிகளவில் அதாவது 600க்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்புடன் உள்ளேயே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா வைரஸ் வேகமாக பிற நாடுகளுக்கும் பரவி வருவதால், சர்வதேச பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. தொழில் துறை சார்ந்த பங்குச் சந்தையில் முதலீடு செய்ய பெரும் முதலீட்டாளர்கள் தற்போது தங்கத்தில் கவனம் செலுத்த தொடங்கி உள்ளனர். இதன் காரணமாக, ஆசிய பங்குச் சந்தை நேற்று பெரும் வீழ்ச்சி கண்டது. தென் கொரியாவின் சியோல் பங்குச்சந்தை குறியீடு 1.2 சதவீதமும், ஜப்பான் பங்குச்சந்தை குறியீடு 0.2 சதவீதம், ஆஸ்திரேலிய பங்குச்சந்தை குறியீடு 0.3 சதவீதமும் வீழ்ச்சி அடைந்தது. இந்த வீழ்ச்சி தற்காலிகமானது என்றும், விரைவில் பொருளாதாரம் மீளும் என்றும் பெரு நிறுவனங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

8 இந்தியர்கள் நிலை?
ஜப்பான் துறைமுகத்தில் உள்ள டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் 138 இந்தியர்கள் சிக்கியுள்ளனர். அவர்களில் 8 பேருக்கு கொரோனா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர்கள் உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளதாக அங்குள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

29 வயது டாக்டர் பலி
சீனாவில் கொரானோ வைரசுக்கு மேலும் ஒரு இளம் டாக்டர் பலியாகி உள்ளார். வுகான் மருத்துவமனை டாக்டரான பெங்க் யின்ஹூவாவுக்கு (வயது 29), சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட இருந்தது. ஆனால், கொரோனா வேகமாக பரவுவதால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய கடமை இருப்பதால் தனது திருமணத்தை தள்ளிப் போட்டார். ஆனால் அவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார்.  இதுவரை கொரோனா வைரஸ் தாக்கி பலியான டாக்டர்கள் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.

இந்திய சிறப்பு விமானம் அனுமதி தர தாமதமா?
சீனாவின் வுகான் நகரில் இருந்து இதுவரை 647 இந்தியர்களும், மாலத்தீவை சேர்ந்த 7 பேரும் சிறப்பு விமானம் மூலமாக நாடு திரும்பி உள்ளனர். இன்னும் 81 பேர் அந்நகரில் தங்கி உள்ளனர். அவர்களை மீட்டு வர இந்தியாவிலிருந்து சி-17 குளோப்மாஸ்டர் சிறப்பு விமானம் கடந்த 17ம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது. பெரிய விமானமான அதில் மருந்து பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த விமானம் மூலம் 81 இந்தியர்கள் மட்டுமின்றி அண்டை நாட்டை சேர்ந்தவர்களும் மீட்டு அழைத்து வரப்பட உள்ளனர். ஆனால், சிறப்பு விமானத்திற்கு அனுமதி தர சீன அரசு தொடர்ந்து தாமதித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. இதனை அந்நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் கெங் சுயாங் மறுத்துள்ளார். இரு நாட்டு அதிகாரிகள் தொடர்ந்து பேசி வருவதாகவும் விரைவில் அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் நேற்று தெரிவித்தார்.

Tags : spread ,panic attacks ,Asia , Overseas coronavirus ,causes ,panic attack,fast spreads overseas
× RELATED மும்பை தாராவியில் இருந்து ராணுவ அதிகாரியாக உமேஷ் கீலு தேர்வு..!!