×

டெல்லி ரயில் நிலையத்தில் புதுமை தோப்புக்கரணம் போட்டால் டிக்கெட் ப்ரீ: பயணிகள் வரவேற்பு

புதுடெல்லி: டெல்லி ஆனந்த் விகார் ரயில் நிலையத்தில் 30 தோப்புக்கரணம் போட்டால் இலவசமாக நடைமேடை டிக்கட் (பிளாட்பார்ம் டிக்கெட்) வழங்கும் புதுமையான திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உடல் ஆரோக்கியம் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, ‘ஆரோக்கியமான இந்தியா’ என்ற திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசின் இந்த புதிய முயற்சியை  ஊக்குவிக்கும் வகையில், ரயில் நிலையங்களில் தோப்புக்கரணம் அதாவது உட்கார்ந்து எழுந்தால் (ஸ்குவாட்) இலவசமாக பிளாட்பார்ம் டிக்கெட் வழங்கும் திட்டத்தை ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. இது தொடர்பாக ரயில்வே துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: டெல்லி ஆனந்த் விகார் ரயில் நிலையத்தில் இலவச டிக்கெட் வழங்கும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் முன்பாக, ஒருவர் 30 முறை உட்கார்ந்து எழுந்தால் சென்சார் மூலம் அதனை உணரும் இயந்திரம், இலவச நடைமேடை டிக்கெட்டை வழங்கும். இது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

இதேபோல், பயணிகளின் உடல் நலனை கருத்தில் கொண்டு ‘தாவா தோஸ்த்’ என்ற பெயரில் ரயில் நிலையங்களில் பொது மருந்தகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம், ரயில் பயணிகள் தங்களுக்கு வேண்டிய மருந்துகளை வாங்கிக் கொள்ளலாம்.தற்போது, ராஜஸ்தான் மற்றும் டெல்லியில் 10 மருந்தகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு ஆண்டுக்குள் இவற்றின் எண்ணிக்கையை நூறாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த 4 ஆண்டுகளில் ஆயிரம் அமைக்கப்படும். இது மட்டுமின்றி, 3டி மசாஜ் ரோலர்ஸ் மூலமாக மசாஜ் அளிக்கும் வகையில் மசாஜ் நாற்காலியும் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : Bree ,passengers , Ticket Bree, Welcome ,passengers
× RELATED கள்ளக்குறிச்சியில் நின்று...