அமெரிக்க அதிபர் டிரம்ப் சூசக அறிவிப்பு இந்தியாவுடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும்: பிரதிநிதிகள் குழுவில் இவாங்கா திடீரென சேர்ப்பு

வாஷிங்டன்: தனது இந்திய பயணத்தின்போது வர்த்தக ஒப்பந்தம் எதுவும் நடக்காது என்று நேற்று முன்தினம் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப், ‘இந்தியாவுடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் ஏற்படக்கூடும்,’ என்று நேற்று திடீரென மாற்றி அறிவித்தார்.  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நாளை மறுதினம் 2 நாள் பயணமாக இந்தியா வருகிறார். இதனால், இந்திய - அமெரிக்க உறவில் புதிய அத்தியாயம் பிறக்கும் என்றும், ராணுவம் மற்றும் வர்த்தக துறைகளில் மிகப்பெரிய ஒப்பந்தங்கள் நடக்கும் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால், வாஷிங்டனில் நேற்று முன்தினம் டிரம்ப் அளித்த பேட்டியில், ‘இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் எதுவும் இப்போது நடக்காது,’ என்றார். மேலும், ‘வர்த்தக ரீதியாக அமெரிக்காவை இந்தியா நன்றாக நடத்தவில்லை,’ என்றும் குற்றம்சாட்டினார். இது, இந்தியாவில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில்,  கொலோரோடாவில் நேற்று நடந்த, பேரணியில் பேசிய டிரம்ப், இந்த கருத்தில் இருந்து திடீர் பல்டி அடித்தார்.  பேரணியில்அவர்  பேசியதாவது: நான் அடுத்த வாரம் இந்தியா செல்கிறேன். வர்த்தகம் குறித்து பேசுகிறோம்.  வர்த்தகம் அடிப்படையில்,  பல ஆண்டுகளாக அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதித்து வருகின்றது.

எனக்கு பிரதமர் மோடியை மிகவும் பிடிக்கும். வர்த்தகம் குறித்து இந்தியாவிடம் சிறிது பேச வேண்டும்.  எனது பயணத்தின்போது இருநாடுகளும் இடையே பிரமாண்டமான மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படலாம். என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.

இவ்வாறு அவர் பேசினார். டிரம்ப்பின் முதன்மை ஆலோசகராக அவருடைய மகள் இவாங்கா இருந்து வருகிறார். டிரம்ப்பின் இந்திய பயணத்தின்போது அவருடன் வரும் அமெரிக்க உயர்நிலை குழுவில் இவர் இடம் பெறாமல் இருந்தார். ஆனால், நேற்று இந்த குழுவை டிரம்ப் மாற்றி அமைத்தார். அதில், தனது மகள் இவாங்காவின் பெயரையும் அவர் சேர்த்தார். இதன் மூலம், இந்திய பயணத்தின்போது நடத்தப்படும் பேச்சுவார்த்தையில் முக்கியத்துவம் இருக்கும் என்பது உறுதியாகி இருக்கிறது.

‘எல்லாவற்றிலும் நம்பர் -1’

லாஸ் வேகாசில் பேசிய அதிபர் டிரம்ப், “பேஸ்புக்கில் டொனால்ட் டிரம்ப் முதல் இடம், 2வது இடம் பிரதமர் மோடி என சமீபத்தில் பேஸ்புக்கின் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் கூறி இருந்தார். ஆனால், சிறிது நேரம் இருங்கள் என கூறிய நான், அவருக்கு 150 கோடி மக்கள் இருக்கின்றனர். அவர்தான் முதலிடத்தில் இருக்க வேண்டும். ஆனால், எனக்கு 35 கோடி மக்கள்தான் உள்ளனர். ஆனாலும் பேஸ்புக், டிவிட்டர் என எது இருந்தாலும், அமெரிக்காவுக்கு முதலிடம் என்பதை எப்போதும் விட்டு தர மாட்டோம்,’’ என்றார்.

மைதான திறப்பு விழா கிடையாது

அகமதாபாத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மோடேரா கிரிக்கெட் மைதானம் உலகிலேயே மிகப்பெரியது. இதில் 1.10 லட்சம் பேர் வரை அமர்ந்து போட்டியை கண்டு மகிழலாம். இந்த மைதானத்தில்தான் ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சி மட்டுமே இந்த மைதானத்தில் நடக்கும். அது, மைதானத்தின் திறப்பு விழாவாக இருக்காது. அது பின்னர் நடைபெறும்,’ என குஜராத் கிரிக்கெட் சங்கம் கூறியுள்ளது.

Related Stories: