மகளிர் உலக கோப்பை டி20 தொடக்க போட்டியில் இந்தியா அபார வெற்றி: பூனம் சுழலில் மூழ்கியது ஆஸ்திரேலியா

சிட்னி: ஐசிசி மகளிர் உலக கோப்பை டி20 தொடரின் தொடக்க லீக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணியுடன் மோதிய இந்தியா 17 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று அசத்தியது.ஆஸ்திரேலியாவில் நடைபெறும் இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் இரண்டு பிரிவுகளாக லீக் சுற்றில் மோதுகின்றன. ஏ பிரிவில் நேற்று நடந்த தொடக்க போட்டியில் ஆஸ்திரேலியா - இந்தியா மோதின. டாஸ் வென்ற ஆஸி. அணி முதலில் பந்துவீசியது. இந்தியா 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 132 ரன் குவித்தது.தொடக்க வீராங்கனைகள் மந்தனா 10 ரன், ஷபாலி வர்மா 29 ரன்னில் வெளியேற, கேப்டன் ஹர்மான்பிரீத் கவுர் 2, ஜெமிமா ரோட்ரிகியூஸ் 26 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். தீப்தி ஷர்மா 49 ரன் (46 பந்து, 3 பவுண்டரி), வேதா 9 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸி. பந்துவீச்சில் ஜெஸ் ஜோனசன் 2, எல்லிஸ் பெர்ரி, கிம்மின்ஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 133 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. அலிஸ்ஸா ஹீலி, பெத் மூனி இருவரும் துரத்தலை தொடங்கினர். ஒரு முனையில் ஹீலி அதிரடியாக விளையாடி ரன் குவிக்க, மூனி 6 ரன், கேப்டன் மெக் லான்னிங் 5 ரன்னில் பெவிலியன் திரும்பினர்.

அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்த ஹீலி 51 ரன் (35 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி பூனம் யாதவ் சுழலில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். இது ஆட்டத்தின் முக்கிய திருப்பு முனையாக அமைந்தது. நழுவிய ஹாட்ரிக்: பூனம் வீசிய 12வது ஓவரின் 3வது பந்தில் ரச்சேல் ஹேய்ன்ஸ் (6 ரன்), 4வது பந்தில் எல்லிஸ் பெர்ரி (0) விக்கெட்டை பறிகொடுக்க, ஆஸ்திரேலியா 76 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து சரிவை சந்தித்தது. பூனம் ஹாட்ரிக் வாய்ப்புடன் 5வது பந்தை வீசிய நிலையில், ஜோனசன் மட்டையில் பட்டுத் தெறித்த பந்தை விக்கெட் கீப்பர் டானியா பாட்டியா நழுவவிட்டதால் சாதனை வாய்ப்பு பறிப்போனது.ஒரு முனையில் ஆஷ்லி கார்ட்ர்னர் உறுதியுடன் போராட, மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுத்தனர். கார்ட்னர் 34 ரன் (36 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி விக்கெட்டை இழந்தார். ஆஸ்திரேலியா 19.5 ஓவரில் 115 ரன் மட்டுமே எடுத்து 17 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. அந்த அணியில் 2 வீராங்கனைகள் மட்டுமே இரட்டை இலக்க ரன் எடுத்தது குறிப்பிடத்தக்கது.4 ஓவரில் 19 ரன் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றிய பூனம் யாதவ் சிறந்த வீராங்கனை விருதை தட்டிச் சென்றார். ஷிகா பாண்டே 3, ராஜேஸ்வரி 1 விக்கெட் வீழ்த்தினர். தொடக்க போட்டியிலேயே நடப்பு சாம்பியனை வீழ்த்தி அசத்திய இந்தியா 2 புள்ளிகள் பெற்றது. இந்திய அணி தனது 2வது லீக் ஆட்டத்தில் நாளை மறுநாள் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.

Related Stories: