இதுவரை 2 லட்சம் தாண்டியது இந்திய ஐடி நிறுவனங்களில் அமெரிக்கர்கள் அதிகரிப்பு

பெங்களூரு: பிரபல இந்திய சாப்ட்வேர் நிறுவனங்களில் அமெரிக்க இளைஞர்களுக்கு  வேலைவாய்ப்பு அளிப்பது அதிகரித்து வருகிறது. நான்கு முன்னணி சாப்ட்வேர் நிறுவனங்களில் மட்டும் 2 லட்சம் பேர்  இதுவரை பணியில் உள்ளனர். இந்திய சாப்ட்வேர் நிறுவனங்கள் டிசிஎஸ், இன்போசிஸ், காக்னிசன்ட்,  எச்சிஎல் போன்றவற்றின் கிளைகள் அமெரிக்காவில் உள்ளன. இவற்றில் இதுவரை இந்திய  இளைஞர்கள் பணியாற்றி வந்துள்ளனர். இந்தியாவில் இருந்து  அனுப்பப்படும்  எல்லாரும் எச்1பி உட்பட சில விசாக்கள் மூலம் தான் அமெரிக்காவில் பணியாற்ற முடியும். அந்த விசா காலம் முடிந்து விட்டால், அவர்கள் பணி நீடிக்க விசா காலமும் நீட்டிக்கப்பட வேண்டும். இதை  அமெரிக்க குடியேற்ற துறை அங்கீகரிக்க வேண்டும். அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பின், இந்தியர்களுக்கு சலுகை அளிக்கப்படும். எச்1பி மற்றும் கிரீன் கார்டு விஷயத்தில் தாராளமாக செயல்படுவோம் என்று சொன்னாலும், எல்லாம் காற்றோடு போய் விட்டது. அமெரிக்காவில் கிளைகளை கொண்டுள்ள பல இந்திய சாப்ட்வேர் நிறுவனங்கள், இந்திய இளைஞர்களை அனுப்ப  முடியாமல் விசா பிரச்னைகளால் தவிக்கின்றன.

இதனால், பிராஜக்ட் பணிகள்  முடங்கக்கூடாது என்பதால், வேறு வழியில்லாமல் அமெரிக்காவில் உள்ள அமெரிக்க இளைஞர்களை தேர்வு செய்து பணியில் அமர்த்தி வருகின்றனர். இப்படி முன்னணியில் உள்ள 4 சாப்ட்வேர் நிறுவனங்கள் மட்டும் அமெரிக்க பணியாளர்கள்  எண்ணிக்கை 2 லட்சத்ைத  தாண்டியுள்ளது. இது குறித்து சாப்ட்வேர் நிறுவனங்களை ஆராயும் நாஸ்காம் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: விசா பிரச்னைகள்  அதிகரித்து வருகின்றன. அதனால் இந்தியாவில் இருந்து அமெரிக்கா  அனுப்பப்படும் இளைஞர்கள் குறைந்து வருகின்றனர். அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இந்தியாவில் இயங்கும் காக்னிசன்ட் நிறுவனத்தில் அமெரிக்காவில் மட்டும் 46,600 அமெரிக்கர்கள் பணியாற்றுகின்றனர். சில நிறுவனங்களில் 70 சதவீதம் வரை அமெரிக்க இளைஞர்கள் தான் இந்திய நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.   டிசிஎஸ் நிறுவனத்தில் 20 ஆயிரம் பேர், விப்ரோவில் 10 ஆயிரம், எச்சிஎல் நிறுவனத்தில் 13,400 என அமெரிக்கர்கள் பணியாற்றி வருகின்றனர்.

மாணவர்களுக்கும் வாய்ப்பு பறிபோகிறது

இந்தியாவில் சாப்ட்வேர் படித்த மாணவர்களை வேலைவாய்ப்பு  அளிக்க அவர்களின் இறுதி ஆண்டில் கல்லூரிக்கே சென்று சாப்ட்வேர் நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்கும். இதனால் படித்து முடித்த பின் வேலைக்கு போகும் வாய்ப்பு இருந்தது. சமீப காலமாக விசா பிரச்னையால் வெளிநாட்டுக்கு அனுப்பப்படும் இளைஞர்கள் எண்ணிக்கை  குறைந்தது மட்டுமின்றி, கல்லூரிகளில் கேம்பஸ் இன்டர்வியூ நடத்தும்  நிறுவனங்களும் குறைந்து வருகின்றன என்பது அதிர்ச்சியான தகவல். சமீபத்தில் அமெரிக்க, ஐரோப்பிய பல்கலைக்கழகங்களில் மட்டும் 1500 மாணவர்களை டிசிஎஸ் நிறுவனம் அங்குள்ள தன் கிளைகளில் பணிக்கு அமர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: