சென்னை, டெல்லி, பெங்களூரு உள்பட 6 நிலையங்களில் விமான ஊழியர்களுக்கு போதை மருந்து சோதனை: இயக்குனரகம் பரிந்துரை

புதுடெல்லி: விமான போக்குவரத்து ஊழியர்கள் போதை மருந்து பயன்படுத்தி இருக்கிறார்களா? என்பதை சோதனை செய்யும் திட்டத்தை விமான போக்குவரத்து இயக்குனரகம் பரிந்துரை செய்துள்ளது.   விமான போக்குவரத்து துறையில் பணியாற்றும் ஊழியர்கள் போதை மருந்து பயன்படுத்துவதாக புகார் கூறப்படுகிறது. இதனால் விமானங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குவதால், பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் விமான போக்குவரத்து ஊழியர்களுக்கு கஞ்சா, ஓபியம் மற்றும் வேறுவகையிலான போதை மருந்து சோதனை நடத்த சிவில் விமான போக்குவரத்து பொது இயக்குனரகம் பரிந்துரை செய்துள்ளது. சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பின் கொள்கை மற்றும் செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக விமான போக்குவரத்து பொது இயக்குனரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் நேற்று மேலும் கூறியதாவது: விமானத்தில் பணியாற்றும் ஊழியர்கள், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் ஆகியோருக்கு போதை மருந்து சோதனை நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த பரிந்துரை இறுதி வடிவம் பெற்றால் முதல்கட்டமாக டெல்லி, மும்பை, ெகால்கத்தா, சென்னை, பெங்களூரு, ஐதராபாத் ஆகிய 6 விமானங்களில் இந்த சோதனை நடத்தப்படும். இந்த சோதனை வீடியோவாக பதிவு செய்யப்படும்.

இந்த சோதனையில் ஊழியரின் சிறுநீர் சோதனை செய்யப்படும். ஒரு ஆண்டில் 10 சதவீத ஊழியர்கள் திடீர் சோதனைக்கு உட்படுத்தபடுவார்கள். இதில், போதை மருந்து உட்கொண்டது தெரியவந்தால் அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள். அவர்கள் புணர்வாழ்வு மையத்துக்கு அனுப்பப்படுவார்கள். அதன் பிறகும், போதை பொருள் பயன்படுத்துவது உறுதியானால் அவரது லைசென்ஸ் ரத்து செய்யப்படும். ஊழியர்கள் மருத்துவ சோதனைக்கு மறுத்தால் ஒருவாரத்தில் அவர் மருத்துவ சோதனை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு தாக்கல் செய்யாவிட்டால் அவரது லைசென்ஸ் 3 ஆண்டுகளுக்கு தற்காலிகமாக ரத்து செய்யப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: