மருத்துவ பரிசோதனைக்காக பெண் ஊழியர்களை நிர்வாணமாக கும்பலாக நிறுத்தி வைத்த கொடுமை: குஜராத்தில் மீண்டும் அதிர்ச்சி சம்பவம்

சூரத்: மருத்துவ பரிசோதனைக்காக சென்ற மாநகராட்சி பெண் ஊழியர்களை நிர்வாணமாக ஒரே இடத்தில் கும்பலமாக நிறுத்தி வைத்த கொடுமை குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.குஜராத் மாநிலம், பூஜ் நகரில் உள்ள பெண்கள் கல்லூரியில் மாணவிகள் 68 பேருக்கு மாதவிடாய் இருக்கிறதா என அவர்களின் ஆடைகளை அவிழ்த்து சமீபத்தில் நடத்தப்பட்ட சோதனை கடும் கண்டனத்திற்கு உள்ளானது. இது நடந்த அடுத்த சில தினங்களில் மீண்டும் சர்ச்சைக்குரிய சம்பவம் சூரத்தில் நடந்துள்ளது.சூரத் மாநகராட்சியில் 3 ஆண்டு பயிற்சி முடித்த கிளார்க்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படுவது வழக்கம். இந்த பரிசோதனை மாநகராட்சி மருத்துவமனையிலேயே நடக்கும். இது போல், நேற்று முன்தினம் மாநகராட்சி பயிற்சி பெண் ஊழியர்கள் சிலர் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் பெண் டாக்டர்களால் வலுக்கட்டாயமாக முழு நிர்வாணப்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  இதுதொடர்பாக, சூரத் மாநகராட்சி ஊழியர்கள் சங்கம் சார்பில் மாநகராட்சி கமிஷனரிடம் புகார் தரப்பட்டுள்ளது. மாநகராட்சி விதிமுறைப்படி, 3 ஆண்டு பயிற்சி முடித்த அனைத்து பயிற்சி ஊழியர்களும் மருத்துவ பரிசோதனையில் தேர்ச்சி பெறுவது அவசியமாகும்.

இது குறித்து மாநகராட்சி ஊழியர்கள் சங்கத்தினர் கூறியதாவது:மருத்துவ பரிசோதனை தேர்வுக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதை நடத்தும் முறை தான் மிகக் கேவலமாக உள்ளது. மருத்துவ பரிசோதனை நடத்த பெண் ஊழியர்கள் ஒருவர் பின் ஒருவராக அழைத்து பரிசோதிக்கலாம். ஆனால், 10 பேரை ஒரே இடத்தில் ஒருவரோடு ஒருவராக நிர்வாணமாக நிறுத்துவது ஏற்றுக் கொள்ள முடியாதது. இது சட்ட விரோதமானது, மனித நேயமற்றது. அதே போல, திருமணமாகாத பெண்களிடம் கூட டாக்டர்கள், ‘கர்ப்பமாக இருக்கிறீர்களா, ஏற்கனவே கர்ப்பமாக இருந்திருக்கிறீர்களா’ என்பது போன்ற தனிப்பட்ட கேள்வி கேட்கின்றனர். மருத்துவ சோதனையில் பெண்களுக்கு உரிய மதிப்பளிக்கப்பட வேண்டும். தேவையற்ற கேள்விகளை டாக்டர்கள் தவிர்க்க வேண்டும். தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவர் சூரத் மேயர் ஜகதீஷ் படேல் அளித்த பேட்டியில், ‘‘பெண் ஊழியர்கள் கூறியது உண்மையாக இருக்கும்பட்சத்தில், தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என உறுதி அளித்துள்ளார்.

Related Stories: