பாலியல் தொல்லை புகாரில் கைதானதால் அவமானம் ஜாமீனில் விடுதலையான இசை ஆசிரியர் தற்கொலை

திருவனந்தபுரம்: கேரளாவில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட இசை ஆசிரியர் தூக்குபோட்டு  தற்கொலை செய்து கொண்டார்.  கேரள மாநிலம், கோட்டயம்  அருகே வைக்கம்  ஆறாட்டுக்குளங்கரை பகுதியை சேர்ந்தவர் நரேந்திர பாபு (51). ஏற்றுமானூர்  அரசு உறைவிட பள்ளியில் இசை ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். பள்ளி விடுதியில் தங்கி இருந்தார். கடந்த ஆண்டு அக்டோபர் 23ம் தேதி   இவர், தங்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அந்த  பள்ளியில் படிக்கும் 14  மாணவர்கள் போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து,  போலீசார் அவரை போக்சோ  சட்டத்தில் கைது செய்து கோட்டயம் சிறையில்   அடைத்தனர். 45 நாள் சிறைவாசத்துக்கு பிறகு சமீபத்தில் வெளியே வந்த அவர், மனமுடைந்து  காணப்பட்டார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டுக்கு அருகே உள்ள   மரத்தில் அவர் தூக்கு போட்டு இறந்தார். இந்த இடத்துக்கு அருகே விளையாட்டு மைதானம் உள்ளது. அங்குள்ள வாலிபால் வலையில் சில கடிதங்கள் கட்டி வைக்கப்பட்டு இருந்தன. அவற்றை போலீசார்  கைப்பற்றினர். அவை, மாவட்ட எஸ்பி, மாஜிஸ்திரேட், கலெக்டர் ஆகியோருக்கு  நரேந்திர  பாபு தனித்தனியாக எழுதிய கடிதங்கள் என்பது தெரிந்தது. தன் மீது பொய் புகார்  அளிக்கப்பட்டதாகவும், தனது சாவுக்கு காரணமான பள்ளியின் கண்காணிப்பாளர், டிரைவர் உள்பட 3 பேர் மீது கடும் நடவடிக்கை  எடுக்கும்படியும் அவற்றில் அவர் எழுதியுள்ளார். இது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: