×

3000 கோடியில் முதலீடுகளை ஈர்த்து 7,000 பேருக்கு வேலைவாய்ப்பு: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

சென்னை: 3000 கோடி  அளவிற்கு முதலீடுகளை ஈர்த்து 7 ஆயிரம் பேருக்கு  வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.   பொருளாதாரம் மற்றும் முதலீடு வாய்ப்புகள் மற்றும் புதிய தொழில்களின்  தொடக்க விழா கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று  நடந்தது. இந்த விழாவை  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். விழாவில் சென்னை-பெங்களூர் இடையே தொழில்துறை நடைபாதை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 500 கோடி முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ள கொரிய நாட்டைச் சேர்ந்த ஹானான் ஆட்டோமோட்டிவ் நிறுவனத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். மேலும், கும்மிடிப்பூண்டியில் உள்ள சிப்காட் தொழில் வளாகத்தில் ஜப்பான் நாட்டு நிறுவன முதலீட்டில்  504 கோடியில்  உருவாக்கப்பட்டுள்ள தொழில் நிறுவனத்தை முதலமைச்சர் துவங்கி வைத்தார்.

தொடர்ந்து பிகோ மற்றும் சிப்காட் நிறுவனங்களின் கூட்டு முயற்சி திட்டமாக திருவள்ளூரில்  217 கோடி முதலீட்டில் உருவாக்கப்படவுள்ள தமிழ்நாடு பாலிமர் தொழில் பூங்கா திட்டத்திற்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: தொழிற்சாலைகள் எண்ணிக்கையில் இந்தியாவில் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தமிழகத்தில் உற்பத்தி செய்யும் பொருட்களை துறைமுகம் மற்றும் விமான நிலையங்கள் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இருக்கும் சிறப்பம்சங்களை கண்டுகளிக்க முதலீட்டாளர்களை  அன்புடன் அழைக்கின்றேன். உலக முதலீட்டாளர் மாநாட்டில் போட்டப்பட்ட ஒப்பந்தப்படி 550 நிறுவனங்கள் ஏற்கனவே உற்பத்தியை தொடங்கிவிட்டன. மேலும் 219 நிறுவனங்கள் பல்வேறு கட்டங்களில் செயல்பாட்டில் உள்ளன. எனது  வெளிநாட்டு பயணத்தின் போது உறுதியளித்த ஜோகோ ஹெல்த் நிறுவனம் முதலீட்டை விட 16 மடங்கு அதிகளவில் முதலீட்டை தமிழகத்தில் கொண்டுவந்துள்ளது.

மின்சார வாகனப்பூங்கா, வானூர்தி பூங்கா, ஆழ்கடல் மீன்பிடி திட்டங்கள், கால்நடை பூங்கா உள்ளிட்ட பல திட்டங்கள் தமிழகத்தை வளர்ச்சிப்பாதையில் அழைத்துச் செல்கிறது. அமைதியான, நவீன தொழில்நுட்பங்களை கொண்ட மாநிலம் என்பதால் அதிகளவில் இங்கு தொழில்கள் தொடங்கப்படுகிறது. பாலிமர் பூங்கா 3000 கோடி  அளவிற்கு முதலீடுகளை ஈர்த்து 7ஆயிரம் பேருக்கு  வேலை வாய்ப்பை உருவாக்கும். ஜப்பான் மற்றும் ஜெர்மனி நாடுகளுடன் தமிழ்நாடு அரசு கூட்டு குழுவை உருவாக்கியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்திருக்கும் நீங்கள், நாடுகளுக்கு இடையே இணைப்பு பாலமாக இருக்க வேண்டும். இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாடு பெரும் பங்கு அளித்து வருகிறது.

இவ்வாறு பேசினார்.  விழாவில், தொழில் முதலீட்டாளர்களுக்கான கையேட்டினை  முதல்வர் வெளியிட  அமைச்சர் எம்.சி.சம்பத் பெற்றுக்கொண்டார்.  இதில் தலைமைசெயலாளர் சண்முகம், தொழில்துறை செயலாளர் முருகானந்தம், வெளியுறவுத்துறை செயலர் திருமூர்த்தி மற்றும் பல்வேறு நாடுகளை சேரந்த தொழில் முதலீட்டாளர்கள், வெளிநாட்டு தூதர்கள் என பலரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.



Tags : CM Edappadi Palanisamy , Investments, Employment, Chief Minister Edappadi Palanisamy
× RELATED சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவ...