×

நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கு இடைத்தரகரிடம் சிபிசிஐடி போலீஸ் கிடுக்கிப்பிடி: திடுக்கிடும் தகவல்கள்

தேனி: நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கு தொடர்பாக, இடைத்தரகர் வேதாச்சலத்திடம் சிபிசிஐடி போலீசார் நேற்று நடத்திய விசாரணையில், அவர் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. தேனி அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் உதித்சூர்யா நீட் தேர்வில், ஆள் மாறாட்டம் செய்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுதொடர்பாக மாணவர் உதித்சூர்யா, அவரது தந்தை வெங்கடேஷ் மற்றும் பல மாணவர்கள், அவரது பெற்றோர்கள் மற்றும் இடைத்தரகர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வந்த நிலையில், அவர்கள் ஜாமீன் பெற்றுள்ளனர். இடைத்தரகர் மனோகரன், மாணவர் பவித்ரன் ஆகியோர் சிறையில் உள்ளனர். கடந்த 14ம் தேதி கிருஷ்ணகிரியைச் சேர்ந்த இடைத்தரகர் வேதாச்சலம், இவ்வழக்கு தொடர்பாக சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.  அவரை தேனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, சிபிசிஐடி போலீசார் மனு செய்தனர்.

இதன்பேரில் வேதாச்சலத்தை, தேனி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் பன்னீர்செல்வம் முன்னிலையில் நேற்று முன்தினம் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது, வேதாச்சலத்தை தங்களிடம் விசாரணைக்கு ஒப்படைக்குமாறு சிபிசிஐடி போலீசார் மனு அளித்தனர். இதையேற்று 4 நாட்கள் வேதாச்சலத்தை காவலில் எடுத்து விசாரிக்க மாஜிஸ்திரேட் அனுமதியளித்தார். இதையடுத்து, தேனி சமதர்மபுரத்தில் உள்ள சிபிசிஐடி போலீஸ் அலுவலகத்தில், விசாரணை நடத்தினர். விசாரணையில், நீட் தேர்வு முறைகேட்டில் கடந்த 3 ஆண்டுகளில் யார், யார் தொடர்பில் இருந்தனர்? இந்த முறைகேட்டுக்கு மூளையாக செயல்பட்டு டிமிக்கி கொடுத்து வரும் முகமது ரஷீதுக்கும், தனக்குமான தொடர்பு, நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களை அணுகிய முறை ஆகியவை குறித்தும், இதில் இடைத்தரகர்களுக்கு வழங்கப்பட்ட கமிஷன் தொகை குறித்தும் கூறியதாக கூறப்படுகிறது. இன்னும் 3 நாட்கள் விசாரணை நடக்க உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் நீட் தேர்வு முறைகேட்டில் தொடர்புடைய நீட் தேர்வு மையங்கள் குறித்தும் ரகசிய தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Tags : police crackdown ,CBCID , NEET CHOICE TRANSFORMER, INTERMEDIATE, CBCID
× RELATED ஆருத்ரா மோசடி வழக்கில் கைது...