×

டிஎன்பிஎஸ்சி மோசடி வழக்கு முக்கிய குற்றவாளி ஜெயக்குமாரிடம் ராமேஸ்வரத்தில் சிபிசிஐடி விசாரணை

ராமேஸ்வரம்: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வில் ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதிய 30க்கும் மேற்பட்டோர் 100 இடங்களுக்குள் பிடித்து தேர்ச்சி பெற்றனர். விசாரணையில் இவர்கள் மோசடி செய்து வெற்றி பெற்றது அம்பலமானது. இதுகுறித்து சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்ட இடைத்தரகர் ஜெயக்குமார் உள்ளிட்டோரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜெயக்குமார் நேற்று சிபிசிஐடி போலீசார் வாகனத்தில் ராமேஸ்வரத்திற்கு அழைத்து வரப்பட்டார்.  குரூப் 4 தேர்வு மோசடிக்காக ராமேஸ்வரம் வந்தபோது, ஜெயக்குமார் தங்கியிருந்த தனியார் தங்கும் விடுதி குறித்து விசாரணை நடத்தினர். நேற்று மாலை சுமார் 4 மணியளவில் ராமேஸ்வரத்திற்கு அழைத்து வரப்பட்ட ஜெயக்குமார், ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் ராமேஸ்வரம் நகராட்சி பேருந்து நிலையத்திற்கும் கொந்தம்புளி பேருந்து நிறுத்தத்திற்கும் இடையில் சாலையோரத்தில் காரில் இருந்து இறக்கப்பட்டார்.

தொடர்ந்து சிறிது தூரம் நடந்து சென்று குறிப்பிட்ட இடம் வந்ததும், விடுதியில் தங்கியது குறித்து விபரங்களை அதிகாரிகளிடம் தெரிவித்தார். சுமார் 20 நிமிடங்கள் அதே இடத்தில் நின்று விசாரணை நடத்தியபின் அதிகாரிகள் ஜெயக்குமாரை காரில் அழைத்து சென்றுவிட்டனர். டிஎன்பிஎஸ்சி தேர்வில் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையங்களில் முறைகேடு நடந்துள்ளது உறுதி செய்யப்பட்டு இதில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், நேற்று முக்கிய குற்றவாளியான ஜெயக்குமாரை அழைத்து வந்து விசாரணை செய்தது ராமேஸ்வரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசாரின் விசாரணையில் ராமேஸ்வரம் தொடர்புடைய மேலும் பல தகவல்களை ஜெயக்குமார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் தேடப்பட்ட வாலிபர் சரண்
டிஎன்பிஎஸ்சி குரூப்4 தேர்வில் ராமநாதபுரம், கீழக்கரை மையங்களில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து குரூப் 2 தேர்விலும் முறைகேடு நடந்தது வெளியானது. இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குரூப்4 தேர்வில் நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா விஜயாபதியை சேர்ந்த ஐயப்பன் (36) என்பவர் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் 2ம் கட்ட விசாரணைக்கு ஐயப்பனுக்கு சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை என கூறப்படுகிறது. அவரை போலீசார் ஐயப்பனை தேடி வந்தனர். இந்நிலையில் ஐயப்பன், நேற்று சாத்தான்குளம் குற்றவியல் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி சரவணன் உத்தரவிட்டார்.

Tags : Rameswaram ,CBCID ,DNBSC ,Jayakumar CID , DNPSC fraud case, guilty Jayakumar, Rameswaram, CBCID
× RELATED ராமேஸ்வரம் கோயில் உண்டியல் வழக்கு:...