இந்தியன்-2 படப்பிடிப்பில் 3 பேர் கிரேன் விழுந்து உயிரிழந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்

சென்னை: இந்தியன்-2 படப்பிடிப்பில் 3 பேர் கிரேன் விழுந்து உயிரிழந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. நசரத்பேட்டை காவல் நிலையத்தில் இருந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றி சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்து 3 பேர் பலியான சம்பவம் தொடர்பாக கமல்ஹாசன், இயக்குனர் ஷங்கர், காஜல் அகர்வாலுக்கு போலீசார் சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளனர். கமல்ஹாசன் நடிக்க ஷங்கர் இயக்கும் படம் இந்தியன்-2. இதன் படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி நசரத்பேட்டையில் உள்ள படப்பிடிப்பு தளத்தில் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு மின்விளக்குகள் பொருத்தி காட்சிகள் படமாக்கப்பட்டன. திடீரென்று பாரம் தாங்காமல் கிரேன் சரிந்து விழுந்தது. உதவி இயக்குனர் கிருஷ்ணா, ஆர்ட் உதவியாளர் சந்திரன், தயாரிப்பு உதவியாளர் மது ஆகியோர் அதே இடத்தில் நசுங்கி உயிரிழந்தனர். 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்தசம்பவம் தொடர்பாக பூந்தமல்லி, நசரத்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த படப்பிடிப்பு தளத்திலிருந்த கமல்ஹாசன், ஷங்கர், காஜல் அகர்வால் உள்பட அனைவருக்கும் போலீசார் சம்மன் அனுப்பி விசாரணை நடத்த முடிவு செய்துளளனர். மேலும் படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கும், கிரேன் இயக்குபவர் மற்றும் தயாரிப்பு நிர்வாகி மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முன்னதாக விபத்தில் இறந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்த கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு நேற்று கமல்ஹாசன் வந்தார். அவர் கூறும்போது,’இது என் குடும்பத்தில் நடந்த விபத்தாக கருதுகிறேன்.

இதுபோன்ற சம்பவம் இனி எப்போதும் நடைபெறாமல் இருக்க சினிமா துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு கடைநிலை ஊழியனுக்கும் பாதுகாப்பு தர முடியாததாக சினிமா துறை இருப்பதை அவமானமாக கருதுகிறேன். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிதி உதவி அளிக்கிறேன். இது உயிர் சேதத்துக்கான பரிகாரம் அல்ல. அவர்கள் குடும்பத்தை பாதுகாப்பதற்காக. இந்த விபத்தில் நான் நூலிழையில் உயிர் தப்பினேன்’ என்றார். இந்நிலையில் இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

Related Stories: