ஹைட்ரோ கார்பனுக்கு அரியலூரில் அனுமதியா? விவசாயிகள், பொதுமக்கள் அச்சம்

திருச்சி: பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அரியலூர் மாவட்டத்தையும் அறிவித்த முதல்வர் நேற்று சட்டசபையில் தாக்கல் செய்த மசோதாவில் அரியலூர் மாவட்டத்தை சேர்க்கவில்லை. எனவே அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி அளிக்கப்படலாம் என்ற அச்சம் அந்த மாவட்ட மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

காவிரி படுகையில் 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு கடந்தாண்டு ஓஎன்ஜிசி, வேதாந்தா, ஐஓசி மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியது. இதை எதிர்த்து போராட்டம் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து, ஹைட்ரோ கார்பன் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.இந்தநிலையில் மேலும் 11 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான 5வது ஏலத்துக்கான அறிவிப்பு கடந்த ஜனவரி 15ம் தேதி வெளியிடப்பட்டது. இது விவசாயிகள் மத்தியில் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. காவிரி படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பது தான் இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்தும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.

இந்தநிலையில், சேலம் தலைவாசல் அருகே கடந்த 9ம் தேதி நடந்த விழாவில், திருச்சி, கரூர், தஞ்சை, நாகை, திருவாரூர், புதுகை, கடலூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்த அறிவிப்பு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனாலும் காவிரி படுகையில் நடந்து வந்த ஹைட்ரோ கார்பனுக்கான பூர்வாங்க பணிகள் நிறுத்தப்படாததால், விவசாயிகள் மத்தியில் சந்தேகம் எழுந்தது. இந்தசூழ்நிலையில் நேற்று தமிழக சட்டப்பேரவையில், கேள்வி நேரம் முடிந்ததும், தமிழ்நாடு மாநிலத்தின் காவிரி ஆற்றுப்படுகை மண்டலத்தில் உள்ள வேளாண் நிலங்களை பாதுகாப்பதற்கான ஒரு சட்ட முன்வடிவினை முதல்வர் எடப்பாடி  பழனிசாமி தாக்கல் செய்தார்.

அதில், இந்த சட்டம் 2020ம் ஆண்டு தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்படுத்தும் சட்டம் என வழங்கப் பெறும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய டெல்டா மாவட்டங்களிலும், கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோவில், மேல் புவனகிரி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை மற்றும் குமராட்சி வட்டாரங்கள், புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி, ஆவுடையார்கோயில், மணமேல்குடி, திருவரங்குளம் மற்றும் கரம்பக்குடி வட்டாரங்களுக்கு இந்த சட்டம் பொருந்தும். எந்தவொரு நபரும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் எந்த ஒரு புதிய திட்டத்தையோ அல்லது புதிய செயற்பாட்டையோ மேற்கொள்ளுதல் ஆகாது.

அதேசமயம் இந்த சட்டம் நடைமுறைக்கு வந்த தேதிக்கு முன்னர் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக செயல்பாட்டில் உள்ள செயல்கள் அல்லது திட்டங்களை பாதித்தலாகாது. இந்தச் சட்டத்தின் நோக்கங்கள் நிறைவேற்றுவதற்கு தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அமைப்பு என்ற பெயரில் ஓர் அதிகார அமைப்பு உருவாக்கப் படுகிறது.முதலமைச்சரை தலைவராகக் கொண்டு, துணை முதலமைச்சர், நிதித்துறை அமைச்சர், சட்டத்துறை அமைச்சர், வேளாண்மை துறை அமைச்சர் உள்ளிட்ட 24 பேரை உறுப்பினர்களாகக் கொண்டு இந்த அதிகார அமைப்பு செயல்படும். இது தனி அதிகார அமைப்பாகும். இந்த அமைப்புக்கு உதவ மாவட்ட ஆட்சியர், வேளாண் துறை இணை இயக்குனர், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் அடங்கிய மாவட்ட அளவிலான 13 பேர் கொண்ட குழு அமைக்கப்படுகிறது. இதில், மாவட்ட கலெக்டரால் பரிந்துரை செய்யப்பட்ட 2 விவசாயிகளின் பிரதிநிதிகள் இடம் பெறுவார்கள். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இந்த சட்ட முன்வடிவு ஒரு மனதாக நிறை வேற்றப்பட்டது.

இந்த சட்டத்துக்கு விவசாய சங்கத்தினர் வரவேற்பு தெரிவித்துள்ள அதேசமயம், ஏமாற்றமும் அளிப்பதாக கூறி உள்ளனர். இதுபற்றி காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் கூறுகையில், சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவில், ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் நிறுத்தப்பட மாட்டாது என கூறப்பட்டுள்ளது. இனிமேல் வரக்கூடிய திட்டங்களுக்குதான் அனுமதி மறுப்பு என்று சொல்லப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிக்கப்பட்ட குழாய்களை அகற்ற வேண்டும் என்று எந்த மக்கள் போராடினார்களோ, அந்த குழாய்கள் எடுக்கப்படாது. இந்த சட்ட மசோதாவில் பல குழப்பங்கள் உள்ளன. கரூர் மாவட்டத்தில் குளித்தலை, திருச்சி மாவட்டத்தில் லால்குடி, புள்ளம்பாடி பகுதிகளும் காவிரி படுகை பகுதிகள் தான். இந்த பகுதிகள் விடுபட்டுள்ளது. எனவே இந்த பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் பணி தொடங்கலாம் என்று அந்த பகுதி விவசாயிகள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. இது தொடர்பாகவும் அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றார். கரூர், திருச்சி மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் பட்டியலில் இடம் பெறாதது குறித்து முதல்வர் அளித்த விளக்கத்தில் ஏற்கனவே அங்கே தொழிற்சாலைகள் இருக்கிறன்றன. அந்த பகுதிகள் பாதிப்புக்கு உள்ளாகவில்லை என்று கூறி உள்ளார்.அதே நேரத்தில் அரியலூர் மாவ6ட்டத்தை பற்றி முதல்வர் குறிப்பிடவில்லை.

புதுக்கோட்டையை சேர்ந்த விவசாய சங்க பிரதிநிதி செங்கோடன் கூறுகையில், 2017ல் அறிவிக்கப்பட்ட நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம், அதன்பிறகு அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை பற்றி தெளிவாக அறிவிக்கவில்லை. நல்லாண்டார்கொல்லை, வடகாடு, கருக்காக்குறிச்சி, கோட்டைக்காடு கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள எண்ணெய் ஆழ்துளை கிணறுகளை பாதுகாப்பாக மூடிவிட்டு விவசாயிகளிடம் நிலத்தை ஒப்படைப்பதாக கலெக்டர் உறுதி அளித்திருந்தார். அதை உடனே செய்ய வேண்டும். காவிரி- குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதால், புதுக்கோட்டை மாவட்டம் முழுவதையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்றார்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு கூறுகையில், 15 ஆண்டு கோரிக்கையை ஏற்று சட்டமன்றத்தில் மசோதா நிறைவேறி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதில் காவிரி டெல்டா மாவட்டங்கள் முழுமையாக இடம்பெறாதது ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் அளிக்கிறது என்றார்.

தமிழக ஏரி, ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் விஸ்வநாதன்: தலைவாசலில் முதல்வர் பேசும்போது பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அரியலூர் மாவட்டத்தையும் அறிவித்தார். நேற்று மசோதாவில் அரியலூர் விடுபட்டு போனது. ஏற்கனவே அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக ஆய்வுகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் முதல்வர் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் அரியலூரை விட்டு விட்டது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. டெல்டாவில் இனி ஹைட்ரோ கார்பன் தொடங்காமல் அனைவரும் அரியலூர் மாவட்டத்தை நோக்கி படையெடுப்பார்கள். எனவே இனி அரியலூர் மாவட்ட விவசாயத்தை காப்பாற்ற மாவட்ட மக்கள் தயாராக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து முதல்வர் சரியான விளக்கம் அளிக்காவிட்டால் மக்கள் போராட்டத்தில் குதிக்க தயாராவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறுகையில், திருவாரூர் மாவட்டத்தில் சோழங்கநல்லூர், பெரியக்குடி கிராமங்களில் ஹைட்ரோ கார்பன் பணிகள் நடந்து வந்தது. எனது போராட்டத்தால் பெரியக்குடியில் இப்பணி நிறுத்தப்பட்டது. ஆனால் சோழங்கநல்லூரில் எண்ணெய் மட்டும் எடுக்கிறோம் என்ற பெயரில் தொடர்ந்து ஹைட்ரோ கார்பன் எடுக்கப்படுகிறது. அந்த பணியை உடனே தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

தமிழக அரசின் சட்ட மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளிப்பார் என்று நம்புகிறேன். ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்காக தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதியோ, மக்களிடம் கருத்து கேட்போ தேவையில்லை என்று மத்திய அரசு ஆணை பிறப்பித்திருந்தது. இதை எதிர்த்து நான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். ஒருவேளை குடியரசு தலைவர் தமிழக அரசின் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்றாலும், நான் தொடுத்துள்ள வழக்கு இந்த பிரச்னைக்கு தீர்வை தரும். அதை தமிழக அரசு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

எனவே தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள மசோதாவை வரவேற்கிறேன். இந்த மசோதாவில் திருச்சி, கரூர் மாவட்டங்களை சேர்க்காதது சரிதான். அந்த மாவட்டங்களில் எண்ணெய், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட வளங்கள் எதுவும் இல்லை. வங்க கடலோர மாவட்டங்களில் தான் இந்த வளங்கள் உள்ளன. ஏற்கனவே ஓஎன்ஜிசி, வேதாந்தா உள்ளிட்ட நிறுவனங்களுடன் மத்திய அரசு போட்டுள்ள ஒப்பந்தம் பற்றி கவலை இல்லை. அதுவெறும் ஒப்பந்தம்தான். தமிழக அரசு அனுமதி இல்லாமல் செயல்படுத்த முடியாது என்றார்.

Related Stories: