விடைத்தாளுடன் ரூ.100 வெட்டினா நூத்துக்கு நூறு: இப்படியும் ஒரு பள்ளி முதல்வர்

லக்னோ: ‘உத்தரப் பிரதேசத்தில் அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க விரும்பும் மாணவர்கள் விடைத்தாளுடன் ரூ.100 இணைத்து கொடுத்து விடுங்கள்,’ என பள்ளி முதல்வர் ஒருவர் அறிவுரை கூறியுள்ள வீடியோ வைரலாகி வருகின்றது. உத்தரப் பிரதேசத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்கள் 56 லட்சம் பேர், பொதுத்தேர்வு தேர்வு எழுதி வருகின்றனர். இந்நிலையில், மவு மாவட்டத்தில் செயல்படும் ஒரு தனியார் பள்ளியின் முதல்வர், ‘தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்கு முறைகேடு செய்ய வேண்டும்,’ என அறிவுரை வழங்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த தனியார் பள்ளியின் முதல்வர் பெயர் பிரவீன் மால். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ‘‘தேர்வு அறையில் நீங்கள் உங்களுக்குள் பேசிக் கொள்ளலாம். விடைத்தாள்களை பரிமாறிக் கொள்ளலாம். நீங்கள் தேர்வு எழுதும் அரசு பள்ளி மையங்களில் உள்ள ஆசிரியர்கள் எனது நண்பர்கள். நீங்கள் கண்காணிப்பாளர்களிடம் சிக்கி கொண்டாலும், அதற்காக யாராவது உங்களை ஒரு முறை அல்லது இரண்டு முறை அறை கொடுத்தாலும் கூட பயப்படவேண்டாம். பொறுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எந்த கேள்விகளையும் விட வேண்டாம். விடைத்தாளில் ₹100 மட்டும் வைத்து விடுங்கள். ஆசிரியர்கள் உங்களுக்கு கண்மூடித்தனமாக மதிப்பெண் வழங்குவார்கள். நீங்கள் தவறாக பதிலளித்தாலும் கூட அது நான்கு மதிப்பெண்களுக்கு பதிலான 3 மதிப்பெண்களை கொடுக்கும்,” என்றார்.

பள்ளி முதல்வர் வழங்கிய இந்த அறிவுரையை மாணவர் ஒருவர் யாருக்கும் தெரியாமல் செல்போனில் ரகசியமாக வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.  இதையடுத்து, அந்த பள்ளி முதல்வரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Related Stories: