×

பேச்சுவார்த்தையில் நிர்வாகம் பங்கேற்காததால் மார்ச் 2ம் தேதி முதல் ஸ்டிரைக் என்எல்சி தொழிற்சங்கம் அறிவிப்பு

புதுச்சேரி: முத்தரப்பு பேச்சுவார்த்தையில் என்எல்சி நிர்வாகம் பங்கேற்காததால் வரும் மார்ச் 2ம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கம் அறிவித்துள்ளது. கடலூர் மாவட்டம், நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் 480 நாட்கள் பணிபுரிந்த அனைத்து தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஒரே வேலையை செய்யும் தொழிலாளர்களுக்கு இருவேறு ஊதியம் வழங்குவதை தவிர்த்து சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 15ம் தேதி ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் என்எல்சி நிர்வாகத்திடம் வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இதுசம்பந்தமாக பேசி தீர்வு காண முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, நேற்று மாலை புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் உள்ள மத்திய உதவி தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் உதவி தொழிலாளர் ஆணையர் கணேசன் தலைமை தாங்கினார். ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் ஏஐடியூசி மாவட்ட பொதுச்செலாளர் சேகர், சங்க தலைவர் அந்தோனி செல்வராஜ், சிறப்பு தலைவர் ராமமூர்த்தி, பொதுச்செயலாளர் செல்வமணி, பொருளாளர் கல்யாணசுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டனர். ஆனால், என்எல்சி நிர்வாகம் தரப்பில் யாரும் பங்கேற்கவில்லை.

இதனால் பேச்சுவார்த்தையை தொடர முடியாத சூழல் ஏற்பட்டது.அப்போது உதவி ஆணையர் கணேசன் வேலைநிறுத்த அறிவிப்பை கைவிட வேண்டும் என வலியுறுத்தினார். அதற்கு தொழிற்சங்க நிர்வாகிகள், கடந்த நவம்பர் 16ம் தேதி சென்னை சாஸ்திரி பவனில் உள்ள மத்திய தொழிலாளர் துணை ஆணையரிடம் அளித்த மனு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை இதுவரை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. பேச்சுவார்த்தையிலும் நிர்வாகம் பங்கேற்கவில்லை. ஆகையால், திட்டமிட்டப்படி மார்ச் 2ம் தேதி நள்ளிரவு முதல் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும். இதர தொழிற்சங்கங்கள் வரும் 25ம் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளன. அவ்வாறு வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் அதிலும் பங்கேற்போம் என கூறினர்.

ஐகோர்ட் அறிவுறுத்தல்

என்எல்சி இந்தியா நிறுவனம் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், நெய்வேலியில் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தை துவங்க, இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 19ம் தேதி தடையாணை பிறப்பித்தது. மேலும், வேலைநிறுத்தம் போன்ற நேரடி நடவடிக்கைகளை தவிர்த்து, சமரச பேச்சுவார்த்தை அதிகாரியான மத்திய உதவி தொழிலாளர் நல ஆணையர் இப்பிரச்னைக்கு சுமூகமான முறையில் தீர்வுகாண, தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடும்படி அறிவுரை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : NLC ,trade union announcement , NLC
× RELATED விபத்தில் என்எல்சி தனி அலுவலர் இறப்பு;...