யானைகள் நடமாட்டம் உள்ளதால் கொடைக்கானல் சாலையில் இரவில் தங்கக்கூடாது: வனத்துறை எச்சரிக்கை

பழநி: பழநி-கொடைக்கானல் சாலையில் இரவு நேரங்களில் பழ வியாபாரிகள் சாலையோர தற்காலிக குடில்களில் தங்கக்கூடாதென வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் 18 ஆயிரம் ஹெக்டேர் அளவில் பெரிய வனப்பரப்பை கொண்டது பழநி வனச்சரகம். இங்கு அதிக அளவில் யானை, சிறுத்தை, மான், கேளையாடு உள்ளிட்ட விலங்குகள் உள்ளன. தற்போது வனப்பகுதியில் போதிய நீர் இல்லாததால் யானை உள்ளிட்ட விலங்குகள் உணவு மற்றும் குடிநீர் தேடி வனப்பகுதியை ஒட்டிய விளைநிலங்களுக்குள் புகுந்து விடுகின்றன. இதன் காரணமாக கடந்த சில தினங்களாக பழநி-கொடைக்கானல் சாலையில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கொய்யா சீசன் துவங்கி உள்ளதால் பழநி-கொடைக்கானல் சாலையில் செல்லும் சுற்றுலா பயணிகளிடம் விற்பனை செய்வதற்காக இச்சாலையில் ஏராளமான தற்காலிக குடில்கள் அமைக்கப்பட்டு தோட்டத்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மா, கொய்யா, சப்போட்டா, இளநீர் போன்றவைகளை விற்பனை செய்து வருகின்றனர். இவர்களில் சிலர் இரவு நேரங்களில் அந்த குடில்களிலேயே தங்கி விடுகின்றனர். இரவு நேரங்களில் சுற்றித்திரியும் யானைக்கூட்டங்களால் இவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உண்டாகி உள்ளது.

இதன்காரணமாக பழநி வனத்துறையினர் கொடைக்கானல் சாலையில் பழங்கள் விற்பனை செய்பவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மாம்பழம் மற்றும் கொய்யாக்களின் வாசனைக்கு யானைகள் வர வாய்ப்புண்டு. எனவே, கொடைக்கானல் சாலையில் தற்காலிக குடில்கள் அமைத்து விற்பனை செய்யப்படும் பழங்களை இரவில் மீண்டும் எடுத்து சென்றுவிட வேண்டும். குடில்களில் இரவு நேரங்களில் தங்கக்கூடாது. மின்சாரங்களால் யானைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும்  என்பதால் குடில்களில் மின்சாரம் பயன்படுத்தக்கூடாது. யானைகளின் நடமாட்டம் தென்பட்டால் உடனடியாக வனத்துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.

Related Stories: