சென்னையில் ஹெல்மெட் அணியாத இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம்: எஸ்.ஐ மீது எடுத்த நடவடிக்கை குறித்து டி.ஜி.பிக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

சென்னை: சென்னையில் ஹெல்மெட் அணியாத இளைஞர் கட்டையால் தாக்கப்பட்டது தொடர்பாக டி.ஜி.பி.க்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. சென்னையில் வாகன சோதனையின் போது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞருக்கு ஆய்வாளருக்கு இடையே வாக்குவாதத்தில் இளைஞர் மீது ஆய்வாளர் கட்டைக்கொண்டு தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை ஓட்டேரி அருகே புளியந்தோப்பு போக்குவரத்துக்கு சிறப்பு உதவி ஆய்வாளர் ரமேஷ் என்பவர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இஎஸ்ஐ குடியிருப்பு பகுதியை சேர்ந்த 19 வயதுடைய சுரேந்தர் என்பவரை வளைத்து பிடித்தார். அந்த நேரத்தில் அவர் ஹெல்மெட் அணியாமல் இருந்ததால் அபராதம் விதிப்பதாகக் போக்குவரத்து சிறப்பு அதிகாரி கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கைகலப்பாக மாறி ஆய்வாளர் ரமேஷ், சுரேந்தரை கட்டையை கொண்டு தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சுரேந்தருக்கு தலையில் ரத்தம் கொட்டியபடி இருந்ததை பார்த்த பொதுமக்கள் ஆத்திரமடைந்து ஆய்வாளரை தாக்க முயன்றனர். இதனை தொடர்ந்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஓட்டேரி இன்ஸ்பெக்டர் வள்ளி, சுரேந்தரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பின்னர் சிறப்பு உதவி ஆய்வாளர் ரமேஷை அங்கிருந்து அனுப்பி வைத்தார். இது குறித்து இளைஞர் சுரேந்தர் அளித்த புகாரின் அடிப்படையில் உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விவகாரம் தொடர்பான வீடியோ பதிவானது சமூக வலைத்தளங்களில் பரவியதன் காரணமாக இந்த சர்ச்சை மேலும் வலுத்தது. தொடர்ந்து சம்பவம் தொடர்பான செய்தி வெளியானதை அடுத்து, இதை மாநில மனித உரிமை ஆணையம் செய்திகளை அடிப்படையாக வைத்து தானே முன்வந்து வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் மூன்று முக்கிய கேள்விகளை கேட்டு டி.ஜி.பி பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவை,

* போக்குவரத்து விதிமீறல் செய்யப்பட்டதற்காக சுரேந்திரனை சிறப்பு உதவி ஆய்வாளர் தாக்கியது மனித உரிமை மீறல் இல்லையா?

* சிறப்பு உதவி ஆய்வாளர் மீது எவ்வித நடவடிக்கைகள் எடுத்துள்ளீர்கள்?

* இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க காவல்துறை எவ்வித நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது?

என்ற அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்து தமிழக டி.ஜி.பியும், சென்னை மாநகர கூடுதல் போக்குவரத்து ஆணையர் அருண் ஆகியோர் இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவை பிறப்பித்து மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. தொடர்ந்து கட்டையால் அடித்த எஸ்.ஐ. ரமேஷ் மீது எடுத்த நடவடிக்கை குறித்து விளக்கம் தரவும் மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories: