கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவ முறைகள் பற்றி விளக்கும் விழிப்புணர்வு சிற்பங்கள்: பொதுமக்கள் வரவேற்பு

சென்னை: வளர்ந்து வரும் நாகரீக உலகில் கல்வி மற்றும் இணையதளங்கள் மூலமும், மருத்துவர்களின் அறிவுரைகள் மூலமும், பல்வேறு மருத்துவ விழிப்புணர்வு அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளும், அவர்தம் உறவினர்களும் மருத்துவத்தின் நெறிமுறைகளை அறிந்துகொள்வதுடன் யோகா பயிற்சி, உடல் உறுப்பு தானம், முதலுதவி போன்றவை குறித்து விளக்கும் புதுமையான, வேறெங்கும் இல்லாத விழிப்புணர்வு சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதையத்துடிப்பு குறைந்து வரும் நோயாளிகளுக்கு, மருத்துவரும், செவிலியர்களும் எவ்வாறு முதலுதவி அளிக்கிறார்கள் என்பதை விளக்கும் சிற்பம் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, இதயம், சிறுநீரகம், கண் போன்ற உடல் உறுப்புகள் தானம் குறித்தும் வளமான வாழ்க்கைக்கு தினமும் யோகா பயிற்சியின் அவசியத்தை உணர்த்தும் வகையில் படைக்கப்பட்டுள்ள சிற்பங்களும் அனைவரையும் கவரும் வகையில் உள்ளன. அரசு மருத்துவமனையின் புதுமையான முயற்சியாக பண்ருட்டியை சேர்ந்த மணி என்ற சிற்பி சிமெண்ட்டினால் வடிவமைத்துள்ள இந்த விழிப்புணர்வு சிற்பங்களை அனைவரும் பார்த்து செல்கின்றனர்.

இதுகுறித்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை முதலவர் தெரிவித்ததாவது, யோகாசனம், உடல் உறுப்பு தானம், முதலுதவி உள்ளிட்டவை குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு கொண்டு வருவதற்காக இத்தகைய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்றைய உலகில் உடல் உறுப்பு தானம் செய்ய பலரும் முன்வராததால் நிறைய உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. ஆதலால், உடல் உறுப்பு தானம் குறித்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் உறவினர்கள் அனைவரும் இத்தகையை சிற்பங்களை கண்டு மனிதனின் உயிர் எவ்வளவு மகத்துவமானது என்பதை உணர வேண்டும் என்ற நோக்கத்தோடு சிற்பங்கள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Related Stories: