ஸ்ரீரங்கம் கோவில் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு: அறக்கட்டளை நிலத்தை விற்க தடையால் பக்தர்கள் மகிழ்ச்சி!

திருச்சி: ஸ்ரீரங்கம் கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலத்தை விற்க உச்சநீதிமன்றம் தடை விதித்திருப்பதை பக்தர்கள் வரவேற்றுள்ளனர். 1901ம் ஆண்டு தோப்புலான் செட்டியார் என்ற தொழிலதிபர், பல கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் 25 ஆயிரம் சதுர அடி நிலத்தை ஸ்ரீரங்கம் கோவிலுக்கு தானமாக வழங்கியிருந்தார். அதனை அவரது சந்ததியினர் நடத்தும் அறக்கட்டளை விற்க முற்பட 16 ஆண்டுகள் சட்ட போராட்டத்தின் மூலம் அதனை ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகம் தடுத்து நிறுத்தியுள்ளது. இதனை பக்தர்கள் வரவேற்றுள்ளனர். உச்சநீதிமன்ற தீர்ப்பால், நிலத்தை தானமாக வழங்கிய தோப்புலான் செட்டியாரின் நோக்கம் நிறைவேறி இருப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர். இதேபோல் தமிழகம் முழுவதும் அனைத்து கோவில்களுக்கும் சொந்தமான ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை நீதிமன்றங்கள் விரைவில் மீட்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அங்குள்ள பக்தர் ஒருவர் தெரிவித்ததாவது, முந்தைய பெரியோர்கள் அறக்கட்டளை ஒன்றினை அமைத்து அவர்களின் நிலங்களை கோவில்களுக்கும், தர்ம காரியங்களுக்கும் மக்களுக்கு வழங்கியிருந்தனர். ஆனால் அதன்பிறகு வந்த அறக்கட்டளையை சேர்ந்தவர்கள் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து விற்பனை செய்யும் முடிவில் இருந்துள்ளனர். ஆதலால் கோவில் நிலங்களில் பல கையகப்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து, ஸ்ரீரங்கம் கோவில் நிலத்தை விற்பதற்காக சுமார் 16 வருடங்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. ஆனால் தற்போது உச்சநீதிமன்றம் கோவில் நிலத்தை விற்க தடை விதித்து, கோவில் இடங்களை தர்ம காரியங்களுக்கும், இந்து விழாக்களுக்கும் பயன்படுத்த வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இது பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என தெரிவித்தார்.

Related Stories: