×

இலங்கை கடற்படையின் தாக்குதலை கண்டித்து ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் நாளை வேலைநிறுத்தம் அறிவிப்பு

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் நாளை ஒருநாள் வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளனர். இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஜேசு என்ற மீனவருக்கு வலது கண்ணில் பாதிப்பு ஏற்பட்டதாக சக மீனவர்கள் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து அவர் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதல் அச்சம் காரணமாக 3 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன் பிடிக்காமல் கரை திரும்பினர். ராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 750க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் தனுஷ்கோடி அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது அத்துமீறி வந்த இலங்கை கடற்படையினர் படகுகள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடரும் இலங்கை கடற்படையினரின் அத்துமீறலுக்கு மீனவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ராமேஸ்வரம் கடலோர காவல்படை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சூழலில் இலங்கை கடற்படையினரின் அத்துமீறிய செயலை கண்டித்து ராமேஸ்வரத்தில் உள்ள விசைப்படகு மீனவர்கள் நாளை ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த வேலைநிறுத்தத்தில் 9 மீனவ சங்கங்களை சேர்ந்த மீனவர்கள் பங்கேற்கவுள்ளனர். இது தொடர்பாக இன்று ராமேஸ்வரம் துறைமுகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

Tags : strike ,fishermen ,Rameshwaram ,attack ,Sri Lankan Navy ,attacks , Sri Lanka Navy, Attack, Rameswaram, Fishermen, Strike
× RELATED பஞ்சாப் – அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம்: 53 ரயில்கள் ரத்து