டி.என்.பி.எஸ்.சி. முறைகேட்டை சிபிஐ விசாரிக்க கோரிய மனு; தலைமை செயலர், சிபிஐ பதிலளிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு

மதுரை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4, குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முறைகேடு தொடர்பாக இதுவரை 47 நபர்கள் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரி மதுரை மேலூரை சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவில் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1, குரூப் 2, 2 ஏ, குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகளில் முறைகேடு நடந்திருப்பது அம்பலமாகி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பெரும்பாலான அரசுப்பணிகளுக்கான நியமனங்கள் டிஎன்பிஎஸ்சி மூலமே நடக்கிறது. இதற்கான எழுத்துத்தேர்வுகள் மாநிலம் முழுவதும்  பள்ளிகளில் நடக்கிறது. தேர்வு பணிகள், வருவாய்த்துறையினர், கல்வித்துறையினர் மற்றும் போலீசாரைக் கொண்டே நடத்தப்படுகிறது. இதனால்தான் சுலபமாக விடைத்தாளை திருத்தி மோசடி செய்துள்ளனர்.

குரூப் 1 மற்றும் குரூப் 2, குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு வழக்கை தமிழக போலீஸ் விசாரித்தால் நியாயம் கிடைக்காது என்று வழக்கறிஞர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கில், தமிழக தலைமை செயலர், சிபிஐ மற்றும் டிஎன்பிஎஸ்சி தலைவர் பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. வழக்கை மார்ச் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Related Stories: