அருப்புக்கோட்டை அருகே மின்வாரிய அலுவலகம் பகுதியில் குப்பைக்கிடங்கில் அடிக்கடி தீ விபத்து

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே மின்வாரிய அலுவலகப்பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால் காம்பவுண்ட் சுவர் கட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மதுரை-தூத்துக்குடி நான்குவழிச்சாலையும், அருப்புக்கோட்டை, பாலையம்பட்டி சர்வீஸ் ரோட்டின் சந்திப்பில் பாலையம்பட்டி ஊராட்சியின் குப்பை கொட்டும் இடம் உள்ளது.  ஊராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளிலிருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை ஒட்டு மொத்தமாக இங்குதான் கொட்டுகின்றனர். இதன் அருகில் உபமின்நிலையம் உள்ளது.  இங்கிருந்து பாலையம்பட்டி, கோபாலபுரம், கோவிலாங்குளம், கல்குறிச்சி, தோணுகால், ஜோகில்பட்டி, கட்டங்குடி உட்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின்விநியோகம் செய்யப்படுகிறது.

உபமின்நிலையம் அருகில் குப்பைகள் மலைபோல் கொட்டிக் கிடக்கிறது. இதில் எதிர்பாராத விதமாக தீ பிடிப்பதால் தீ காற்றில் பறந்து உபமின்நிலையம் வரை பரவுகிறது.  இதனால் இங்குள்ள டிரான்ஸ்பார்மர்கள், மின்வயர்கள் கருகி விடும் அபாயத்தில் உள்ளது.  இந்த தீயினால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இருசக்கர வாகனங்கள் செல்வோர் குப்பையிலிருந்து வெளியேறும் புகையினால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்து ஏற்படுகிறது.

மேலும் காற்று வேகமாக வீசும்போது கொட்டிக்கிடக்கும் குப்பைகளிலிருந்து பிளாஸ்டிக் பைகள், கேரிப்பைகள், மின்வாரிய அலுவலகத்திற்குள் சென்று விடுகிறது. மேலும் நான்கு வழிச்சாலையில் செல்லும் வாகனங்களில் பிளாஸ்டிக் பைகள் விழும்போது வாகன ஓட்டிகள் நிலை தடுமாறுகின்றனர். குப்பை கிடங்கில் அடிக்கடி தீ பிடித்து எரிகிறது. நேற்று முன்தினம் திடீரென தீப்பற்றி எரிந்தது.

மின்வாரிய அதிகாரி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்து பின்னர் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தினால்  அப்பகுதி முழுவதும் புகை மண்டலமானது இதனால் நான்குவழிச்சாலையில் எதிர் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். மின்வாரிய அதிகாரி கூறுகையில், ‘அடிக்கடி இந்த குப்பை கிடங்கில் தீ பிடித்து எரிகிறது.  அருகில் டிரான்ஸ்பார்ம் இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. வேலை நேரத்தில் பணியாளர்கள் இருப்பதால் உடனுக்குடன் தகவல் கொடுத்து விடுகிறோம். மேலும்  தீ பிடித்தவுடன் மின்சாரம் துண்டிப்பு செய்து விடுகிறோம். இதனால் பொதுமக்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. குப்பைகிடங்கை வேறு இடத்திற்கு மாற்றச் சொல்லியும் தற்சமயத்திற்கு குப்பைக்கிடங்கை சுற்றி சுற்றுச்சுவர் கட்டவும் ஊராட்சி நிர்வாகத்தில் கோரிக்கை வைத்துள்ளோம்’ என்றார்.

Related Stories: