உலக அளவில் அதிக இறக்குமதி வரி விதிக்கும் நாடு இந்தியா; பல ஆண்டுகளாக நெருக்கடி தந்து வருகிறது; டொனால்டு ட்ரம்ப்

வாஷிங்டன்: உலக அளவில் அதிக இறக்குமதி வரி விதிக்கும் நாடாக இந்தியா உள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பல ஆண்டுகளாக இந்தியா நெருக்கடி தந்து வருவதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப் வரும் 24, 25ம் தேதியில் இரண்டு நாள் அரசு முறை பயணமாக இந்தியா வருகிறார். அவர், முதல் முறையாக இந்தியா வர உள்ளதால், இப்பயணம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இப்பயணத்தில்,  இந்தியா - அமெரிக்கா இடையே பல கோடி மதிப்பிலான வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என முதலில் தகவல்கள் வெளியாகின.

ஆனால், நேற்று முன்தினம் பேட்டி அளித்த டிரம்ப் இதை திட்டவட்டமாக மறுத்தார்.அவர் பேசுகையில், ‘வர்த்தக ரீதியாக இந்தியா எங்களை நன்றாக நடத்தவில்லை. நவம்பரில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க உள்ளதால், இந்தியாவுடன் இருதரப்பு பெரிய ஒப்பந்தங்கள் எதுவும் கையெழுத்தாகாது,’ என்றார். இதனால், இந்தியா  உடனான வர்த்தக உறவு, டிரம்ப்புக்கு திருப்தி தரும் வகையில் இல்லாததால்தான் ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லையோ என்ற சந்தேகங்களும் எழுப்பப்பட்டன.

இந்நிலையில், டெல்லியில் நேற்று பேட்டி அளித்த வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீஸ் குமார், ‘‘அதிபர் டிரம்ப் எதைப் பற்றி குறிப்பிட்டார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இருதரப்பு வர்த்தக சமநிலையின்மையை  அவர் குறிப்பிட்டார் என்று அவர் விளக்கமளித்தார். அதிபர் டிரம்ப்பின் பயணம் மூலம் இருதரப்பு உறவு மேலும் பலப்படும். பிரதமர் மோடி-டிரம்ப் சந்திப்பின் போது, எச்1பி விசா தொடர்பாகவும் விவாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன,’’ என்றார்.  24 மற்றும் 25 ஆகிய இரு நாட்கள் இந்தியாவில் பயணம் மேற்கொள்ளும் டிரம்ப், புதுடெல்லி மற்றும் குஜராத்தின் அகமதாபாத் நகருக்கு செல்கிறார்.  அவர் பிரதமர் மோடியுடன் இணைந்து பொது கூட்டம் ஒன்றில் நாட்டு மக்கள் முன் உரையாற்றுகிறார்.

Related Stories: