×

CAA, NPR ஆகியவை இந்தியாவில் இஸ்லாமியர்களை நாடற்றவர்களாக மாற்றக் கூடும் : சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்கா ஆணையம் எச்சரிக்கை

வாஷிங்டன் : குடியுரிமை திருத்தச் சட்டம்,தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவை இந்தியாவில் இஸ்லாமியர்களை நாடற்றவர்களாக மாற்றக் கூடும் என்று சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்கா ஆணையம் தெரிவித்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சர்வதேச மத சுதந்திரக்கான அமெரிக்க ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராக இந்தியாவில் மிகப்பெரிய போராட்டங்கள் வெடித்துள்ளதாகவும் அந்த சட்டங்கள் பாஜக அரசின் இந்துத்துவா சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய குடியுரிமை பதிவேட்டில் இருந்து விலக்கப்படுவதன் மூலம் இஸ்லாமியர்கள் நாடு இழந்தவர்கள் ஆவார்கள் என்றும் நாடு கடத்தலுக்கோ நீண்ட நாட்கள் சிறைக்கோ உட்படுத்தப்படுவார்கள் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களை வெளியேற்றுவது தொடர்பாக பாஜக தலைவர்கள் கூறிய கருத்துகள் அனைத்தும் அதில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக இந்துக்கள் அல்லாத பிற மதத்தினர்கள் நாட்டில் இருந்து அப்புறப்படுத்தப்படுவார்கள் என்றும் இது இந்துத்துவாவின் நூற்றாண்டு இது என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்து இருந்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் புதிய குடியுரிமை திருத்தச் சட்டம் இஸ்லாமியர்களின் சமூகத்தை மோசமாக பாதிக்கும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சர்வதேசம் மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையத்தின் இந்த அறிக்கை ஆதாரமற்ற தவறான குற்றச்சாட்டு என இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. எனினும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் இந்திய வருகைக்கு 3 நாட்களுக்கு முன்னதாக வெளிவந்துள்ள இந்த அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதற்கிடையே அமெரிக்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமி பேரா மற்றும் ஜார்ஜ் ஆகியோர் வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் ஷ்ரிங்லாவை சந்தித்து இதே கவலையை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : CAA ,Islamists ,India ,NPR ,US Commission for International Religious Freedom CAA ,US Commission for International Religious Freedom , Citizenship Amendment Act, National Citizenship Record, Islam, BJP, India, Yogi Adityanath, Religious Freedom
× RELATED சிஏஏ சட்டத்திற்கு இபிஎஸ்சுக்கு தெரியாமல் ஓபிஎஸ் ஆதரவு அளித்தார்