×

சீனாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,236 ஆக அதிகரிப்பு; பாதிக்கப்பட்டோர் 75,465 ஆக உயர்வு

பீஜிங்: சீனாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,236 ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 74,576-ல் இருந்து 75,465 ஆக அதிகரித்துள்ளது. சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள வுகானில் கடந்தாண்டு டிசம்பரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், அந்நாட்டை ஆட்டி படைத்து வருகிறது. கோவிட்-19 என பெயரிடப்பட்ட இந்த வைரசினால் நாள்தோறும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், இறப்போரின் எண்ணிக்கையும் பல மடங்காக அதிகரித்துக் கொண்டே வந்தது. நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆயிரக்கணக்கான மருத்துவர்கள், செவிலியர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது, கொரோனாவின் வீரியம் குறையத் தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. காரணம், இந்த வைரசால் புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

இது பற்றி சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிதாக நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 394 ஆக குறைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த டிசம்பரில் பரவத் தொடங்கிய இந்த வைரஸ் நோயால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை தற்போதுதான் குறைய தொடங்கியுள்ளது. இந்நிலையில் சீனாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,118-ல் இருந்து 2,236 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 74,576லிருந்து 75,465 ஆக அதிகரித்துள்ளது.

சொகுசு கப்பல்

இதேபோல, தென் கொரியா, ஹாங்காங் உள்ளிட்ட 15 நாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றால் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், ஹாங்காங்கில் 2வது நபர் கொரோனா வைரஸ் தாக்கி இறந்துள்ளார். இந்நிலையில், வைரஸ் பரவிய ஜப்பான் சொகுசு கப்பலில் இருந்து நோய் தொற்று  இல்லாத பயணிகளை வெளியேற்றும் பணி நேற்று தொடங்கியது. ஹாங்காங்கில் இருந்து ஜப்பான் நோக்கி வந்த டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் இருந்த சிலருக்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டதால், அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டது.

இதனால், 2,666 பயணிகள் மற்றும் 1,045 ஊழியர்கள் என 3,711 பேருடன் அந்த கப்பல் ஜப்பானின்  யோகோஹாமா துறைமுகத்தில் தனிமைப்படுத்தப்பட்டு பயணிகள் வெளியேற தடை விதிக்கப்பட்டனர். பின்னர் கப்பலில் இருந்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 500க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதே சமயம், 14 நாள் கண்காணிப்புக்குப் பிறகு வைரஸ் தொற்று இல்லாதவர்கள் கப்பலில் இருந்து வெளியேற நேற்று அனுமதி அளிக்கப்பட்டது.


Tags : China ,deaths ,coronavirus Victims , China, coronavirus, coronavirus, death toll
× RELATED தென் சீன கடல் பகுதியில் நான்கு...