வட்டாட்சியர் அலுவலக வளாகத்திலேயே சார்பதிவாளர் அலுவலகம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் : இ.கருணாநிதி எம்எல்ஏ வலியுறுத்தல்

சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பல்லாவரம் தொகுதி எம்எல்ஏ இ.கருணாநிதி (திமுக) பேசியதாவது: பல்லாவரம் சார்பதிவாளர் அலுவலகம், 14 கிராமங்களை உள்ளடக்கியது. இந்த அலுவலகம் கடந்த 1927ம் ஆண்டு முதல், வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்த வாடகை கட்டிடத்தில் போதிய அடிப்படை வசதிகள் மற்றும் போதிய இடவசதி இல்லாததால், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே, புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். அதன்படி, சார்பதிவாளர் அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு, வட்டாட்சியர் கடந்த 21ம் தேதி  மாவட்ட ஆட்சியருக்கு கருத்துரு அனுப்பியிருக்கிறார்.

இந்த நிலையில், ஜமீன் பல்லாவரம், சர்வே எண் 214, ‘டி’ பிளாக் 49ல் 11 சென்ட் இடத்தை நான் தேர்வு செய்து, இதே மன்றத்தில் அறிவித்தேன். அங்கு புதிய வட்டாட்சியர் கட்டிடம் கட்டப்பட்டு, திறக்கப்பட்டுள்ளது. தற்போது, அதே இடத்தில் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்படுமா?. அமைச்சர் கே.வி.வீரமணி: பல்லாவரம் தொகுதியில் நீண்ட நாட்களாக உறுப்பினர் தொடுத்து கொண்டிருக்கும் கேள்வி இது. அங்கே இடம் ஒதுக்கப்படுவதில் பல்வேறு சிக்கல் மீண்டும் மீண்டும் ஏற்படுகிறது. அந்த பகுதியில் இருக்கும் மக்களிடம் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்ற காரணத்தால், இது தள்ளி சென்று கொண்டே இருக்கிறது. கூடிய விரைவில் அதில் ஒரு முடிவு எடுக்கப்பட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கான நடவடிக்கையை அரசு எடுக்கும்.

Related Stories: