×

‘வர்த்தக ரீதியாக நன்றாக நடத்தவில்லை’ அதிபர் டிரம்ப் ஏன் அப்படி கூறினார்?: வெளியுறவுத் துறை விளக்கம்

புதுடெல்லி: ‘வர்த்தக ரீதியாக இந்தியா எங்களை நன்றாக நடத்தவில்லை’ என அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டியது குறித்து வெளியுறவுத் துறை விளக்கம் அளித்துள்ளது.அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப் வரும் 24, 25ம் தேதியில் இரண்டு நாள் அரசு முறை பயணமாக இந்தியா வருகிறார். அவர், முதல் முறையாக இந்தியா வர உள்ளதால், இப்பயணம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இப்பயணத்தில்,  இந்தியா - அமெரிக்கா இடையே பல கோடி மதிப்பிலான வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என முதலில் தகவல்கள் வெளியாகின. ஆனால், நேற்று முன்தினம் பேட்டி அளித்த டிரம்ப் இதை திட்டவட்டமாக மறுத்தார்.அவர் பேசுகையில், ‘வர்த்தக ரீதியாக இந்தியா எங்களை நன்றாக நடத்தவில்லை. நவம்பரில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க உள்ளதால், இந்தியாவுடன் இருதரப்பு பெரிய ஒப்பந்தங்கள் எதுவும் கையெழுத்தாகாது,’ என்றார். இதனால், இந்தியா  உடனான வர்த்தக உறவு, டிரம்ப்புக்கு திருப்தி தரும் வகையில் இல்லாததால்தான் ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லையோ என்ற சந்தேகங்களும் எழுப்பப்பட்டன.

இந்நிலையில், டெல்லியில் நேற்று பேட்டி அளித்த வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீஸ் குமார், ‘‘அதிபர் டிரம்ப் எதைப் பற்றி குறிப்பிட்டார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இருதரப்பு வர்த்தக சமநிலையின்மையை  அவர் குறிப்பிட்டார். இதுதொடர்பான அமெரிக்காவின் கவலையை தீர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன,’’ என்றார்.டிரம்ப் பயணத்தில் எத்தனை ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்ற கேள்விக்கு பதிலளித்த ரவீஸ் குமார், ‘‘5 ஒப்பந்தங்கள் தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த ஒப்பந்தங்களை இறுதி செய்வதில் இந்தியா அவசரப்படவில்லை.  அதிபர் டிரம்ப்பின் பயணம் மூலம் இருதரப்பு உறவு மேலும் பலப்படும். பிரதமர் மோடி-டிரம்ப் சந்திப்பின் போது, எச்1பி விசா தொடர்பாகவும் விவாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன,’’ என்றார்.

ஜப்பான் கப்பலில் மேலும் 2 இந்தியருக்கு கொரோனா
ஜப்பான் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் 138 இந்தியர்கள் சிக்கி உள்ளனர். அக்கப்பலில் 6 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருந்த நிலையில், மேலும் 2 பேருக்கு  வைரஸ் பாதிப்பு இருப்பதாக ரவீஸ் குமார் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‘‘சொகுசு கப்பலில் கொரோனா வைரஸ் பாதித்த இந்தியர்கள் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. இது தொடர்பாக ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து  தகவல்களை கேட்டறிந்து வருகிறோம். கொரோனா பாதிப்பால் சீனா செல்லவோ, அங்கிருந்து இந்தியா வரவோ எந்த  பயண தடையும் விதிக்கப்படவில்லை,’’ என்றார்.

சீனா எதிர்ப்பதில் நியாயம் இல்லை
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அருணாச்சல பிரதேசத்திற்கு சென்றதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தது குறித்து ரவீஸ் குமார் கூறுகையில், ‘‘அருணாச்சல பிரதேசம் நம் நாட்டுடன் ஒருங்கிணைந்த பகுதி என்பதில் இந்தியா உறுதியான  நிலைப்பாடு கொண்டுள்ளது. அருணாச்சலுக்கு இந்திய தலைவர்கள் செல்வதை சீனா எதிர்ப்பதில் எந்த நியாயமும் இல்லை,’’ என்றார்.

Tags : Trump ,State Department , well commercially,President Trump ,description
× RELATED அமெரிக்காவில் ஆபாச பட நடிகைக்கு பணம்...